உத்தரப் பிரதேச லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட 8 விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக வைரலான நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தைச் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிரடியாக தடுத்து நிறுவத்தப்பட்டனர்.

ஆனாலும் தொடர்ச்சியாக போடிய அவர்களுக்கு உத்திரப் பிரதேச அரசு அனுமதி அளித்த நிலையில், கடந்த மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி, விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு, பாலியா என்னும் இடத்தில் உள்ள படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் லவ்பிரீத் வீட்டிற்கு, இரவு 9 மணியளவில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒவ்வொரு வீடுகளுக்காக சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். 

அப்போது, விவசாயிகளின் குடும்பத்தினரை ராகுல், பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட உள்ளூர் செய்தியாளர் ராமன் கஷ்யாப் வீட்டிற்கும் சென்ற அவர்கள், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, மாநிலங்களவை உறுப்பினர் தீபெந்தெர் சிங் ஹூடா ஆகியோர் உடன் சென்றனர். 

இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பாதுகாப்பு வழக்கத்தை விட மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன், இவர்கள் செல்ல மொத்தமாக 7 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் இன்று சந்திக்கின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் கருத்தில், “விவசாயிகளை ஒடுக்குபவர்கள் சுதந்திரமாக அலைகிறார்கள் என்றும், விவசாயிகளுக்கான நீதியின் குரல்கள் பாஜக அரசாங்கத்தால் ஒடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் நாங்கள் நீதியின் குரலை அடக்க விடமாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்கு சாத்தியமில்லை” என்றும், பிரியங்கா காந்தி மிக கடுமையாக தாக்கி உள்ளார்.

அத்துடன், “அவர் பதவியில் இருந்தால் பாரபட்சமற்ற விசாரணைக்கு சாத்தியமில்லை என்றும், எஃப்.ஐ.ஆர் இல்லாமல் எங்களை கைது செய்ய போலீசாரால் முடிகிறது என்றால், அவர்கள் ஏன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய முடியாது?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “பாஜகவினரால் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் தியாகம் ஒரு போதும் வீண்போகாது” என்றும், அவர் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார்.