இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் இன்று அவருடைய 88வது பிறந்த நாள். அதையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1991-96-ல் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார் மன்மோகன் சிங். 2008-ம் ஆண்டு உலக அளவில் பொருளாதாரம் பின்னடைவைக் கண்ட போது இந்தியா அதில் பெரிய அளவுக்கு பாதிப்படையாமல் சிலபல திட்டங்களை மேற்கொண்டார் என்று பொருளாதார வல்லுநர்களால் பாராட்டப்படுபவர் மன்மோகன் சிங்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு மிக நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தவர் அவர். அவர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் அமைத்தார். ஆனால், அடிப்படையில் மன்மோகன் சிங் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு பொருளாதார நிபுணராக இருந்து வந்தார். அவரை அரசியலுக்கு அழைத்து வந்த பெருமை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவையே சேரும்.

பிரதமர் மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932ல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1948ல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார். அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரை பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் 1957ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். 

அதைத் தொடர்ந்து 1962ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில். பட்டத்தைப் பெற்றார். ‘‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்கு மற்றும் தன்னிறைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள்’’ (கிளாரென்டண் பிரஸ், ஆக்ஸ்போர்டு, 1964) என்ற அவருடைய புத்தகம், இந்தியாவின் உள்நோக்கு அடிப்படையிலான வர்த்தகக் கொள்கைப்பற்றி அலசுகிறது.

டாக்டர் சிங்கின் சிறந்த கல்வி அறிவு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பெருமைமிக்க டெல்லி பொருளாதாரப் பள்ளியில் கல்வி நிபுணராக இருக்க உதவியது. இந்த காலத்தில் அவர் யூஎன்சிடிஏடி (UNCTAD) செயலகத்திலும் குறுகிய காலம் பணியாற்றினார். இதனால் 1987 மற்றும் 1990ம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சவுத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

1971ல், மன்மோகன் சிங் இந்திய அரசில் இணைந்தார். வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மிக விரைவிலேயே, 1972ல், அவர் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசில், மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்னவென்றால், 1991 முதல் 1996 வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியில் டாக்டர் மன்மோகன் சிங் இருந்ததுதான். அப்போது அவர் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. டாக்டர் சிங் என்ற தனிநபர் செய்த சாதனைகள் இன்றளவும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

டாக்டர் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் (1987) ஆகும். மேலும், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசியச் செலாவணி விருது (1993 மற்றும் 1994), சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956), கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் மிகச்சிறப்பான மாணவராக இருந்ததற்காக ரைட்ஸ் பரிசு (1955) ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர ஜப்பானின் நிஹான் கெய்ஜாய் ஷிம்புன் உள்ளிட்ட பல்வேறு உயரிய சங்கங்களின் கவுரவங்களையும் டாக்டர் சிங் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் கவுரப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பிரதிநிதியாக டாக்டர் சிங் பல்வேறு சர்வதேச மாநாடுகள், சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். சிப்ரசில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் (1993) இந்தியக் குழுவினருடன் அவர் கலந்து கொண்டார். மேலும், வியன்னாவில் 1993ல் நடந்த உலக மனித உரிமைகள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ல் இருந்து இருக்கிறார். அங்கு அவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 22 மே 2009ல் இரண்டாவது முறையாக பிரதமராக அவர் பதவியேற்றார்.

இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்திய நாடு தற்போது உணர்வதாகவும், அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் மன்மோகன்சிங்ஜி-க்கு பிறந்த தின வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளையும் ஆரோக்கிய வாழ்வையும் உங்களுக்கு அளிக்க கடவுளிடம் பிரார்த்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.