“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு துணை நிற்பேன்” என்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி,
ஆறுதல் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள நங்கல் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். தற்பொது, கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு
அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அந்த சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அத்துடன், அந்த சிறுமி ஆன்லைன் வழியாக பாடம் படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 1 ஆம் தேதி அன்று வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் அந்த சிறுமி சென்று உள்ளார்.

ஆனால், அந்த சிறுமி நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சற்று சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை தேடி அந்த பகுதிக்கு
சென்று உள்ளனர்.

அங்கு, ஒரு சிறுமியின் உடலை, பூசாரி ஒருவர் சுடுகாட்டில் வைத்து எரித்துக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது உறவினர்களுடன் அங்கு சென்றுள்ளனர். அங்கு, தங்களது மகளின் உடலை 4 பேர் சேர்ந்து
உடலை எரித்துக் கொண்டிருப்பதை கண்டு, கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

அப்போது, கடும் ஆதி்ரமடைந்த சிறுமியின் உறவினர்கள், அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையி்ல், விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், “சிறுமி தண்ணீர் பிடித்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், அதன் காரணமாகவே சிறுமியின் உடலை எரிப்பதாகவும்” அவர்கள் கூறியுள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு, டெல்லி மாநில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். 

மேலும், இது குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பலரும் வலியுறுத்தி உள்ளனர். 

குறிப்பாக, “இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். 

அத்துடன், “டெல்லியில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்த வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

இந்த சூழ்நிலையில் தான், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் சிறுமியின் குடும்பத்தாருடன் பேசினேன். அவர்கள் நீதியை தவிர்த்து வேறு எதுவும் கேட்கவில்லை” என்று கூறினார். 

“நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம் என்றும், நாங்கள் நிச்சயமாக உங்களுடன் துணை நிற்பேன் என்றும், அவர்களுக்கு நான் உறுதி அளித்திருக்கிறேன்” என்றும், தெரிவித்தார். 

சிறுமியின் பெற்றோரை சந்தித்த பிறகு, ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் "சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றை தான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “ஒரு தலித்தின் மகளும், நாட்டின் மகள் தான்” என்று, வெளிப்படையாகவே குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியமாக, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவர்களை கைது செய்து
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.