விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் குதித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “விவசாயிகளை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று” என்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கம் எழுப்பியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் கடந்த 8 மாதங்களையும் தாண்டி, 200 நாட்களைக் கடந்து, 250 நாட்களை நோக்கி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. 

டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதிகள் மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 10 க்கும் மேற்பட்ட முறை பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
ஆனால், “3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும்” என்பதில், விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து
வருகிறது.

இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் 
கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்த நிலையில், விவசாயிகளின் போராட்டக் களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றி, விவசாயிகள் அங்கு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அத்துடன், தற்போது நாடாளுமன்றத்தில் மழைக் கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், நிறைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தான், விவசாயிகளின் பேரணியில் கலந்துகொள்வது குறித்து இன்று காலையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் 14 க்கும் மேற்பட்ட எதிர்க் கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் பேரணி கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன் படி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஜந்தர் மந்தர் பகுதி வரை, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் பேரணியாக கலந்துகொண்டனர். 

இந்த போராட்டத்தில், தமிழகத்திலிருந்து திமுக சார்பாக திருச்சி சிவா, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், நடராஜன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

அதாவது, உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பில் உள்ள ஜந்தர் மந்தரில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திரண்டு விவசாயிகளை ஆதரித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பேராட்டத்தின் ஒரு பகுதியாக, “விவசாயிகளை காப்பற்று.. இந்தியாவை காப்பாற்று” என, பதாகைகளை ஏந்தியவாறு, அவர்கள் அனைவரும் முழக்கங்களை எழுப்பினர்.