புனேவில் குடும்ப பிரச்சனை காரணமாக, மேம்பாலத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மஹாராட்ரா மாநிலம் புனே தத்தாவாடி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான நாகப்பா, 30 வயதான அவரது மனைவி பசம்மா கும்பார் உடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இதனிடையே, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போது, மனைவி பசம்மா கும்பார் மிகவும் பொறுமையாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல், கணவன் - மனைவி இடையே நேற்றும் பிரச்சனை எழுந்துள்ளது. இதில், கோபமடைந்த நாகப்பா, மனைவி பசம்மா கும்பாரை கடுமையாக தாக்கி உள்ளார். இதனால், பொறுமை இழந்த அவர், தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, கணவனிடம் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு சென்று விட்டார்.

வீட்டை விட்டுப் புறப்பட்ட அவர், அந்த பகுதியில் உள்ள வாகேவாடி பேருந்து நிறுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள சங்கம் மேம்பாலத்தில் தன் மகளுடன் ஏறி, அந்த பெண் நடந்து சென்றுகொண்டிருந்தார். 

இதனையடுத்து, மனைவி கோபமாகப் போவதால், மனைவியை சமாதானம் செய்ய பின்னாடியே அந்த நாகப்பா, தன் மனைவியிடம் சமரசம் பேசி பார்த்து உள்ளார். 

அப்போது, கணவரின் பேச்சைக் கேட்காமல், அவர் அங்கிருந்து கடந்து செல்வதிலேயே குறியாக இருந்து உள்ளார். இதனால், மீண்டும் நாகப்பா, தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, அந்த மேம்பாலத்தில் மேலேயே கணவன் - மனைவி இடையே மீண்டும் சண்டை வந்து உள்ளது. இந்த சண்டையில் ஆத்திரத்தின் உச்சிக்கேச் சென்ற நாகப்பா, சுமார் 45 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தன் மனைவி பசம்மா கும்பாரை, உயர மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார்.

இதனால், 45 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்த பெண், கீழே விழுந்து உள்ளார். குறிப்பாக, அந்த பெண் சாலையின் நடுவே விழாமல், அந்த பகுதியில் மழை பெய்து தேங்கி இருந்த சேற்றில் விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

அத்துடன், 45 அடி உயரத்தில் கீழே விழுந்ததில், அந்த பெண்ணிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கேயே அந்த பெண் கடும் வலியால் அலறி துடித்த உள்ளார்.

இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் பசம்மா கும்பார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் நாகப்பா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கணவனே மனைவியை மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.