பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா அரசியலுக்கு வர உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளரும், காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தியின் கணவரான 52 வயதான ராபர்ட் வத்ரா, இங்கிலாந்து தலைநகர் லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றத்தில், தன்னுடைய பினாமி பெயரில் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை, காங்கிரஸின் எதிரி கட்சியான பாஜக, இதனை பெரும் பிரச்சனையாக மாற்றியது.

இப்படிப்பட்ட நிலையில் தான், கடந்த 4 ஆம் தேதி டெல்லியின் சுக்தேவ் விஹார் பகுதியில் அமைந்திருக்கும் ராபர்ட் வத்ராவின் வீட்டிற்கு, வருமானவரித் துறையினர் வருகை தந்து, அங்கு அவரிடம் வாக்கு மூலம் பெற்றனர். இந்த அதிரடி சோதனையானது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த சோதனை நடவடிக்கை தொடர்பாக பேசிய ராபர்ட் வத்ரா, “இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பல தலைமுறைகளாகச் சேவை செய்து வரும் ஒரு குடும்பத்துடன் தொடர்புடையவன் நான் என்பதாலேயே, பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பழிவாங்கப்படுவதற்காக, என் மீது பினாமி சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் என் மீது, சிலர் மத்தப்பட்டுள்ளதாக” கவலைத் தெரிவித்தார். 

“அதே நேரத்தில், என் மீதான போலியான குற்றச்சாட்டுகளை எதிர்த்து மிக நீண்ட காலமாகப் போராடி வருகிறேன் என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசு, எப்போதெல்லாம் பிரச்சினையைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் என்னை முன்னிறுத்தி அதனைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

”ஆனால், இவை எல்லாம் வெறும் வதந்திகள் தான் என்றும், எனக்கு இதில் எல்லாம் சுத்தமாகத் தொடர்பும் இல்லை என்றும், என் மீதான குற்றச்சாட்டுக்கு அவர்களிடம் எந்தவொரு அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “பண மதிப்பிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என்று, எப்போதெல்லாம் பாஜக அரசுக்கு சிக்கல் வருகிறதோ, அப்போதெல்லாம் அதனை மடைமாற்ற இத்தகைய அணுகு முறையை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “அவதூறுகளுக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து நான் அடிக்கடி சோர்ந்து போய்விடுகிறேன் என்றும், ஆனால், இனிமேல் அவற்றை எதிர்க்க வேறு வகையான செயல்வடிவத்தை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதற்கான அவசியத் தேவை எனக்கு ஏற்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார். 

முக்கியமாக, “என் மீது சுமத்தப்படும் பினாமி சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளுக்கு இனிமேல் நான், நாடாளுமன்றத்தில் தான் பதில் அளிக்க வேண்டும்” என்றும், அவர் எதையோ குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, மேலே சொன்ன வார்த்தைக்கு வலு சேர்க்கும் விதமாக, “நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான் பயணப்பட்டிருக்கிறேன் என்றும், பரப்புரை செய்திருக்கிறேன் என்றும், பொது மக்களுடன் நான் அதிக நேரம் செலவழித்திருக்கிறேன்” என்றும், எதையோ மையப்படுத்தியே பேசினார்.

குறிப்பாக, “நான் அரசியலில் இல்லாத காரணத்தால் தான், அவர்கள் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள் என்றும், அரசியலிலிருந்து எப்போதுமே நான் விலகியே நிற்கப் பார்க்கிறேன்” என்றும் குறிப்பிட்ட அவர், “நான் அரசியலுக்கு வந்தால் தான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று சொல்லவில்லை” என்றும், அரசியல்வாதியைப் போலவே பேசினார்.

மேலும், “அரசியலுக்கு வந்தால், என்னால் இன்னும் அதிக அளவிலான நல்லது செய்ய முடியும்” என்றும், குறிப்பிட்டு பேசினார்.

இறுதியாக, “எனது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால், ​​நான் அரசியலில் கால் பதிப்பேன் என்றும், அரசியல் மற்றும் அரங்கில் தான் எனது பிரச்சினைகளை எதிர்த்துப் போராட முடியும்” என்றும், அவர் சூசகமாகப் பேசினார்.

இதனால், நேரு குடும்பத்தில் இருந்து அடுத்த புது வரவாக ராபர்ட் வத்ரா வர இருப்பதாகவும், இந்த பேட்டி முழுக்க முழுக்க அரசியலுக்கு அச்சாரம் போடும் விதமாகவே உள்ளதாகவும், அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.