ஆண் குழந்தை கேட்டு வரும் பெண்களை குப்புறப் படுக்க வைத்து, பூசாரி ஒருவர் ஏறி மிதிக்கும் நிகழ்வு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், சில வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 2 வது அலை வீசத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சில மாநிலங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டு, மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல், மீண்டும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் பொது மக்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தற்போது வரை குறையாமல் இருக்கின்றன. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் வருடாந்திர மடாய் மேளாவிற்கு கக்கவசங்கள அணியாமல், சமூக விலகல் இன்றி நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதாவது, ராய்ப்பூருக்கு தெற்கே உள்ள 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் தீபாவளிக்குப் பிறகு, வந்த முதல் சனிக்கிழமை அன்று மடாய் மேளா நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

குறிப்பாக, அந்த மாநில மக்களின் நம்பிக்கையின் படி, திருமணமான ஒரு பெண் தம்தாரியில் உள்ள அங்கர்மோட்டி தெய்வத்தின் கோயிலுக்கு பிரசாதத்துடன் 
வந்தால், ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார் என்று காலம் காலமாக நம்புகிறார்கள்.

முக்கியமாக அங்குள்ள பைகா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள், ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பினால், தலைவிரி கோலத்தில், குப்புற படுத்துக்கொள்ள வேண்டும். அப்படி குப்புறப் படுத்துக்கொள்ளும் பெண்களின் முதுகின் மீது பூசாரிகள், ஏறி நடப்பார்கள். அந்த பெண்களும் பூசாரிகள் நடக்க அனுமதிப்பார்கள். இப்படி நடத்தப்படும் வழிபாடல், தங்களுக்கு ஆண் குழந்தையைப் பிறக்கும் என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கையாகக் காலம் காலமாக இருந்து வருகிறது.

விழா நடைபெற்ற பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று இருந்த போதிலும், 200 க்கும் மேற்பட்ட பெண்கள் முகக்கவசங்கள் இல்லாமல், அந்த கோயில் சடங்கில் பங்கேற்க தம்தாரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் அனைவரும், சமூக விலகல் கடைப்பிடிக்காமல், பங்கேற்பாளர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தீபாவளிக்கு மறு நாள் துர்க் மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும், பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சாட்டையடி சடங்கில், அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பங்கேற்ற சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.