முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
ஆனால் வயது முதிர்வு காரணமாக சிகிச்சைக்கு அவர் உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. விளைவாக, அடுத்தடுத்த நாள்களில் அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி. ஆனாலும் நிலைமை சீராகவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் இதுபற்றி சமீபத்தில் கூறும்போது, அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
 
அவருக்கு கொரோனாவோடு, கூடுதலாக நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் #ripPranabMukherjee என பலர் பதிவிட்டு வந்தனர். அதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் பற்றி பல்வேறு செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. ``எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தகவல் தெரிவித்த பின்னரே, சூழல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும் பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழாவன்று, அவரது மகள், ஷர்மிஷ்டா முகர்ஜீ, தனது தந்தை பிரணாப் முகர்ஜீ அவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பழைய படங்களை பகிர்ந்து கொண்டார். 
 
அதில் அவர், பிரணாப் முகர்ஜீ அவர்கள் சிறுவயதில் இருந்தே, தனது தந்தை மற்றும் மாமாவுடன் தனது சொந்த கிராமத்தில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில், கொடி ஏற்றுவார்கள் என்றும், அப்போதிலிருந்து அவர் சுதந்திர தினத்தன்று ஒரு வருடம் கூட மூவர்ண கொடியேற்றி கொண்டாட தவறியதில்லை எனவும் அவர் அந்த நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அடுத்த வருடம், தனது தந்தை அதே போன்று சுதந்திர தினத்தில் மூவர்ண கொடி ஏற்றுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

இந்நிலையில் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் இன்று (ஆக.31) வெளியிபட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.

செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை விரைவாக செயலிழக்க செய்வதுடன், பிற நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதைத்தொடர்ந்துதான், பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை இன்று காலை தெரிவித்தது.

கூடுதலாக டெல்லி ராணுவ மருத்துவமனை தரப்பிலிருந்து, ``பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு  தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்திருக்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.

ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ள  பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படியான சூழலில், 84 வயது மதிக்கத்தக்க பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதை அறிந்து, இந்தியா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவர் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தினார். ஒரு அறிஞர் சமமானவர், ஒரு உயர்ந்த அரசியல்வாதி, அவர் அரசியல் ஆளுமை மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்டார் பிரணாப்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஐந்து தசாப்த காலமாக அரசியல் வாழ்க்கையில் ஏறத்தாழ அனைத்து உச்சங்களையுமே பிரணாப் முகர்ஜி தொட்டிருக்கிறார். 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் குடியரசு தலைவராக அவர் இருந்தார். மேலும் அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் இருந்தார். அதேபோல இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். 

அரசியலுக்கு முன்பு, அதற்கெல்லாம் முன்னதாக அவர் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்திருக்கிறார். இந்திய வங்கிகளின் பல குழுக்களிலும் பிரணாப் முகர்ஜி பங்கு வகித்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மக்களவை கட்சிக் குழு தலைவராகவும் பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார். அரசின் பல கமிட்டிகளில் தலைவராகவும் இருந்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கைக் குறிப்பில் ஒரு பதவி மட்டுமே விடுபட்டுப் போயுள்ளது. அது நாட்டின் பிரதமர் பதவி. 1984 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பிரதமர் பதவிக்கு அவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டது.

இந்திரா காந்தியின் தலைமையில் அரசியலில் வளர்ந்து வந்த பிரணாப், பிரதமர் பதவிக்கான இயல்பான வாய்ப்பாக இருப்போம் என்று கருதினார். ஆனால் பாஜகவில் எல்.கே. அத்வானியை போல, இவராலும் அந்தப் பதவிக்கு வர முடியாமல் போய்விட்டது. பிபிசி நிறுவனத்தினரின் பேட்டியின்படி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மற்றும் அவருடைய மகளுமான ஷர்மிஷ்தா முகர்ஜியுடன் பேசியதில், இந்தியாவின் பிரதமராக முடியவில்லை என்பதில் தன் தந்தைக்கு வருத்தம் இருந்ததாக கூறப்பட்டிருப்பது தெரியவருகிறது.

பிரணாப் முகர்ஜியின் இழப்பு, காங்கிரஸ் கட்சியினருக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.