40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற வரும் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டுகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலையாகத் தாக்கிய பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

அதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தாக்கத் தொடங்கிய நாள் முதல், சட்டங்கள் இயற்றும் நாடாளுமன்றம் கூடவே இல்லை.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், இது வரை 3 முறை மட்டுமே நாடாளுமன்றம் கூடி இருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களில், சில நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெற்று இருக்கின்றன. 

தற்போது, கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக அவசரமாக திடீரென்று நிறுத்தப்பட்டது. அதே போல், இந்தாண்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 8 ஆம் தேதி வரை, நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், மீண்டும் கொரோனா வைரஸ் 2 வது அலையாகப் பரவத் தொடங்கியதால், மார்ச் 8 ஆம் தேதியோடு கூட்டத் தொடர் முடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான், வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் அறிவித்து உள்ளார்.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரானது வருகிற 19 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை, மொத்தம் 19 நாட்கள் அவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

“மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரானது, தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும்” என்றும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

தற்போது கூடும் இந்தக் கூட்டத் தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆனால், அதற்கு முன்பாக கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 

அதன் படி, வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தற்போது அறிவித்து உள்ளார்.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய கட்சிகள் பங்கேற்க உள்ளது. இவர்கள் முன்னிலையில், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தப் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.