ஆபாச சி.டி. விவகாரத்தில், “வீடியோவில் இளம் பெண்ணுடன் இருப்பது நான்தான்” என்று, முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோக்கள் கடந்த மார்ச் மாதம் வெளியாகி கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

அதாவது, “அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி 2 முறை உல்லாசம் அனுபவித்தார்” என்று, பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர், தனது வழக்கறிஞர் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதன் காரணமாக, ரமேஷ் ஜார்கிகோளி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக முதன் முதலில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு ஆதரவாகவும், ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராகவும் புகார் கொடுத்தார். அதன் பிறகு, தான் கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக அறிவித்தார். 

அதே போல், தனக்கு எதிராக சதி செய்யப்பட்ட ஆபாச வீடியோ வெளியிட்டு இருப்பதாகவும், அரசியலில் தன்னை பழிவாங்க போலியாக வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டு இருப்பதாகவும் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி எதிர் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன், இந்த ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று, கர்நாடக அரசு உத்தரவிட்டது.

அந்த வகையில், இந்த வழக்கை பெங்களூரு சட்டம் - ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். 

மேலும், இந்த வழக்கில் இதுவரை தலைமறைவாக இருந்த சம்மந்தப்பட்ட இளம் பெண், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 

அப்போது, அங்குள்ள கப்பன்பார்க் காவல் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது அந்த இளம் பெண் புகார் அளித்தார். அதன் படி, அவர் மீது பலாத்காரம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதனால் ரமேஷ் ஜார்கிகோளி கைதாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில், இளம் பெண்ணிடம் 6 நாட்கள் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து தகவல்களைப் பெற்றிருந்தனர். 

குறிப்பாக, சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் 2 வது முறையும் ஆஜராகி அந்த இளம் பெண் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில், ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் விசாரித்து முதலில் தகவல்களைப் பெற்றிருந்தார்கள். ஆனால், அவர் மீது பலாத்கார வழக்கு பதிவான பிறகு, விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் இருந்து வந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீசார் நோட்டீசு அனுப்பியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகாமல் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமானதால் ஆபாச வீடியோ விவகாரத்தை போலீசார் விசாரணை நடத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் திடீர் திருப்பமாக “ஆபாச வீடியோவில் இளம் பெண்ணுடன் இருப்பது நான் தான்” என்று, முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

முன்னதாக, “இந்த ஆபாச வீடியோவில் இளம் பெண்ணுடன் இருப்பது நான் அல்ல என்றும், அது போலியான வீடியோ” என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறி வந்தார். ஆனால், இப்போது, “ஆபாச வீடியோவில் இளம் பெண்ணுடன் இருப்பது நான் தான் என்றும், அந்த இளம் பெண் எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்றும்” போலீசாரிடம் ரமேஷ் ஜார்கிகோளி கூறி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக, இந்த ஆபாச வீடியோ விவகாரம் தற்போது திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த ஆபாச வீடியோ விவகாரம் மீண்டும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.