சித்த மருத்துவத்துக்கென தனித்துறை அமைத்து சென்னையில் தலைமை அலுவலகம் தேவை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 4) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியை கலைத்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முயன்று வரும் நிலையில், உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த கேள்வி எச்சரிக்கை மணியாகும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, இந்த கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், சித்த மருந்துவ இணை மருந்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவம் படித்த, தகுதியானவர்கள் ஏராளமானோர் இருக்கும் போது, ஆயுர்வேதம் படித்த ஒருவரை நியமித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த கேள்விகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவம் மத்திய அரசால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது? சித்த மருத்துவர்களுக்குத் தகுதியும், திறமையும் இருந்தாலும் அவர்கள் எவ்வாறு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.

ஆனால், அண்மைக்காலமாக ஆயுர்வேதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்தா உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயுர்வேதம் தவிர்த்த மற்ற இந்திய மருத்துவ முறைகளின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல.

தமிழர்களின் சித்த மருத்துவ முறையின் பொற்காலம் என்றால் அது அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலம் தான். அப்போது ஆயுஷ் அமைச்சகமும் அவரது ஆளுகையின் கீழ் தான் இருந்தது. அதைப் பயன்படுத்தி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை சென்னையில் அவர் அமைத்தார்.

அவரது காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாகத் தான், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுவின் அங்கமாக செயல்பட்டு வந்த சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவை தனியாக பிரித்து, அதற்காக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக்குழு என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டது.

அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் பின்னர் 2010 ஆம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்டது. அதனால், சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன; பயன்பாடும் அதிகரித்தது. ஆனால், காலப்போக்கில் நிலைமை தலைகீழாக மாறியது. சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் குறைந்தது.

ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகராக சென்னையில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் ரவி கடந்த ஆண்டு திடீரென டெல்லிக்கு மாற்றப்பட்டார். மற்ற இந்திய மருத்துவ முறைகளின் இணை ஆலோசகர்களாக பணியாற்றி வந்த மருத்துவர்கள் ஆலோசகர்களாக பதவி உயர்த்தப்பட்ட நிலையில், மருத்துவர் ரவி மட்டும் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார்.

அது மட்டுமின்றி, சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியும் கலைக்கப்பட்டு விட்டது. அதேபோல், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்தா குண பாடத்தில் முதுநிலை பட்டம் படித்தவர்களை நியமிக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

அத்தகையப் படிப்பு படித்தவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் இருந்தும், சித்த மருந்து தயாரிப்பு குறித்து எதுவும் தெரியாத ஆயுர்வேத மருத்துவரை அப்பதவியில் நியமித்தது முழுக்க, முழுக்க சித்த மருத்துவ முறையை அவமதிக்கும் செயல் ஆகும்.

சித்த மருத்துவ முறைக்கு உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு உள்ளது. உலகுக்கே மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் கூட சித்த மருத்துவம் முத்திரை பதித்திருக்கிறது.

பாரம்பரிய சித்த மருத்துவ நூல்களை அரசு மருந்து சட்ட நூல்கள் தொகுப்பில் இணைத்தால், அவற்றில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இன்னும் பல்லாயிரக்கணக்கான அரிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். மாறாக, சித்த மருத்துவ நிர்வாகம் இப்போதுள்ள நிலையில் நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சித்த மருத்துவ முறைக்கு மூடுவிழா நடத்தப்படும் ஆபத்து உள்ளது.

சித்த மருத்துவ முறையும், அது குறித்த ஆராய்ச்சிகளும் தீவிரமடைய வேண்டுமானால், அனைத்து இந்திய மருத்துவ முறைகளும் ஆயுஷ் என்ற ஒரே துறையின் கீழ் செயல்படும் நிலையை மாற்றி, சித்த மருத்துவத்திற்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அத்துறையின் அலுவலகத்தை சென்னையில் அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அதன் செயலாளர் பதவியில் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் வல்லமை பெற்ற சித்த மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.