பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு மற்றும் உள்துறை அமைச்சரின் மொத்த சொத்து மதிப்பு விபரங்கள் தெரிய வந்து உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சொத்து பட்டியலை பிரதமர் அலுவலகத்திடம் அளித்து உள்ளார். இதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய சொத்து மதிப்பானது கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 2 கோடியே 85 லட்சம் ரூபாய் ஆகும். இந்த சொத்து மதிப்பான கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 36 லட்சம் ரூபாய் அதிகம் என்றும் தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 3.3 லட்சம் ரூபாய் வங்கி வைப்புகள் மற்றும் 33 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வருமானம் காரணமாக மோடியின் தற்போதைய சொத்து மதிப்பானது உயர்ந்திருக்கிறது. 

பிரதமர் மோடியிடம் நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி கையிருப்பு தொகையானது 31 ஆயிரத்து 450 ரூபாய் ஆகும். குஜராத் மாநிலம், காந்தி நகர் என்.எஸ்.சி. பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருப்புத் தொகையானது 3 லட்சத்து 38 ஆயிரத்து 173 ரூபாய் உள்ளது. அதே வங்கி கிளையில் ஒரு கோடியே 60 லட்சத்து 28 ஆயிரத்து 939 க்கு நிலைத்த வைப்பானது அதாவது எப்.டி.ஆர். வாய்ப்பு வைப்பு சேமிப்பும் எம்.ஓ.டி. வைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

பிரதமர் மோடி 8 லட்சத்து 43 ஆயிரத்து 124 ரூபாய் மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரங்கள், 1 லட்சத்து 50 ஆயிரத்து 957 ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், 20 ஆயிரம் ரூபாய் வரி சேமிப்பு உள் கட்டமைப்பு பத்திரங்கள், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு சற்று அதிகமான அசையும் சொத்துகளையும் அவர் வைத்து உள்ளார் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

பிரதமர் மோடி 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் அதாவது சுமார் 45 கிராம் எடை கொண்ட மோதிரங்களை அவர் வைத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

குஜராத் காந்தி நகரில் செக்டார் 1 ல் 3,531 சதுர அடி நிலத்தைப் பிரதமர் மோடி கூட்டாக வைத்து உள்ளார். இந்த சொத்துக்கு மேலும் 3 கூட்டாளிகள் இருக்கின்றனர். மொத்தத்தில் 4 பேருக்கும் தலா 25 சதவீதம் பங்கு இருக்கிறது. மோடியின் சொத்து பட்டியலில் இடம் பெற்றிருக்கிற சொத்தானது, அவர் குஜராத்தில் முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு 2 மாதங்கள் முன்பாக அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வாங்கப்பட்டதாகும். அப்போது இந்த சொத்தின் விலை வெறும் 1.3 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்து உள்ளது. 

குறிப்பாக, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து அல்லது அசையா சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பானது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயாக உள்ளது. 

அதே போல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து பட்டியலும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அதன்படி, நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி அவரது நிகரச்சொத்து மதிப்பானது 28 கோடியே 63 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இது 32 கோடியே 30 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது அந்த சொத்து மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம், பங்குச்சந்தையின் வீழ்ச்சி தான் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அமித்ஷாவுக்கு குஜராத்தில் 10 அசையும் சொத்துகள் இருக்கின்றன. இவருடைய சொத்துகள் மற்றும் தாய் வழி வந்த பரம்பரை சொத்துகளானது 13 கோடியே 56 லட்சம் ரூபாய் ஆகும்.