புதிய கல்விக் கொள்கையால் பெரிய மாற்றம் நிகழும் : மன் கி பாத் - த்தில் மோடி!
By Madhalai Aron | Galatta | Aug 30, 2020, 02:55 pm
புதிய கல்விக் கொள்கையால் பெரிய மாற்றம் நிகழும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன.
இந்த நிலையில் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று (ஆகஸ்ட் 30) மன் கீ பாத் உரையாற்றிய பிரதமர், “நமது விவசாயப் பொருளாதாரத்துக்கு இது ஒரு புதிய தொடக்க காலம். விவசாயிகளின் ஆற்றலால் மட்டுமே நமது வாழ்க்கை, நமது சமூகம் ஆகியன இயங்குகின்றன. நமது பண்டிகைகள், விவசாயிகளின் கடும் உழைப்பால் மட்டுமே வண்ணம் பெறுகின்றன. நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களது ஆற்றலை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நமது நாட்டில் இந்த முறை முன்பட்டப் பயிர் விதை நடவை, கடந்த ஆண்டை விடவும் 7 சதவீதம் அதிகம் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
உலக அளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில், ஏழு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான மதிப்புடையது. ஆனால், 7 இலட்சம் கோடி ரூபாய் என்ற இத்தனை பெரிய வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது என்று குறிப்பிட்ட பிரதமர், “விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் மிகவும் பரந்து பட்டது. குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, MSMEக்களோ, கூடவே பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதை முன்னெடுத்துச் செல்ல நாட்டில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இப்போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது. வாருங்கள், நாம் நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம்” என்று அழைப்பு விடுத்தார்.
“இந்த மாத தொடக்கத்தில் இளைஞர்கள் முன்னிலையில் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவால் ஒன்று வைக்கப்பட்டது. இந்த தற்சார்பு பாரதச் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவாலில் நமது இளைஞர்கள் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். இதற்கு 7000 பேர் பதிவு செய்தனர். மூன்றில் இரண்டு பங்கு செயலிகள் இரண்டாம் அடுக்கு-மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கி இருந்தார்கள். ஆய்வுக்குப் பிறகு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 24 செயலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நீங்கள் அவசியமாக இந்த செயலிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட ஒன்றை ஏற்படுத்த உங்களுக்கும் உத்வேகம் பிறக்கலாம். இன்று உலகிலே மிகப்பெரிய நிறுவனங்களாக வலம் வருபவை அனைத்தும் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப் -கள் என்ற நிலையிலிருந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கின” என்று தெரிவித்தார்.
மேலும், “நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும். சிசு கர்ப்பத்தில் இருக்கும் போதும், அதன் குழந்தை பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்குக் கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பாக அதன் மனவளர்ச்சி ஏற்படும், ஆரோக்கியமாக இருக்கும். ஊட்டச்சத்துக்கான இந்த இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது” என்றதோடு,
“கொரோனா பீடித்திருக்கும் சங்கடமான வேளையில், படிப்பில் தொழில்நுட்பத்தை எத்தனை அதிக அளவு பயன்படுத்தலாம், புதிய வழிமுறைகளை எப்படிக் கையாளலாம், மாணவர்களுக்கு எப்படி உதவிகரமாக செய்யலாம், என்பதை மிக இயல்பான, எளிமையான வகையிலே நமது ஆசிரியர்கள் கையாண்டார்கள்: நாட்டில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக நிகழவிருக்கும் ஒரு பெரிய மாற்றத்தின் ஆதாயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமது ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிப்பார்கள்” என்றும் பிரதமர் உரையாற்றினார்.