பிரதமர் மோடி இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமான சில கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின், வாழ்த்து தொகுப்பு இங்கே...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் பிரதமருக்கு  ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும். தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ``பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தில் விசுவாசத்தின் ஒரு லட்சியத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவைகளைப் பெறுவதற்கு எனது வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்" என்று கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ``ஒரு அற்புதமான ஆண்டிற்கான எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடன் பிரதமர் மோடி பல ஆண்டுகள் நம் தேசத்திற்கு சேவையாற்ற கடவுள் அருள் புரியட்டும்: என்று கூறியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ``பிறந்தநாள் வாழ்த்துகள், நீங்கள் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். உங்களது சிறப்பான சேவை இந்த நாட்டுக்குத் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ``மோடிக்கு தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஓய்வில்லா முயற்சிகளால், நாடு புதிய உச்சத்தை எட்டும், அவரது அயராத பணியின் மூலமாக, நாடு தற்சார்பை அடையும் என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், ``பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சர்வ வல்லமையுடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிக நீண்ட வாழ்க்கை அமைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று கூறியிருக்கிறார் அவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்து செய்தியில், ``மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற வாழ்த்துகிறேன். பிறந்த நாள் வாழ்த்தக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``70 ஆவது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi )அவர்கள் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் நூற்றாண்டு கடந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். பொது வாழ்வில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி சாதனைகளை படைக்க வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.

இவர்கள் மட்டுமன்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.