“உத்தரப் பிரதேசம் மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும்” என்று, பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100 வது நாள் நினைவு நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அதன் படி, “உத்தரப் பிரதசேதம் மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்காக மகாகவி பாரதியாரின் பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப்படும்” என்று, அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக வட இந்தியாவில் தமிழ் தொடர்பான ஆய்வுகள், இனி வரும் காலங்களில் நடத்தப்படும் என்றும், டெல்லி பல்கலைக்கழகம், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும் கூட, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெறும்” என்பதாலும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதே போல், பாரதியாரின் 100 வது நாள் நினைவு நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி முன்னதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதில், “சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100 வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்” என்று, பிரதமர் மோடி பெருமையுடன் பதிவு செய்துள்ளார். 

இவற்றுடன், “கடந்த 2020 டிசம்பரில் அவரைப் பற்றி நான் பேசியது இதோ” என்றும், பழைய யூடியுப் வீடியோவின் லிங்க்கையும் அவர் அதில் பகிர்ந்துகொண்டு உள்ளார்.

அதே போல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், “புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 100 வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்! பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும்” என்றும், பதிவிட்டு உள்ளார்.

அதே போல், “மகாகவி பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, நேற்றைய தினம் நடைபெற்ற சட்டப் பேரவையில், “பாரதி நினைவு நாள் 'மகாகவி நாளாக' அனுசரிக்கப்படும்” என்று, தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது இருந்தது குறிப்பிடத்தக்கது.