தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதில், பொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பார் எனக் கூறப்படுகிறது. 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  இந்தியாவில் நாளுக்கு நாள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 65,000 பேர் வரை கண்டறியப்பட்டு வருகின்றனர். இப்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,15,075 என்றுள்ளது. இவர்களில் 15,35,744 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர் எண்ணிக்கை 44,386 என்றுள்ளது.

இதனிடையே, தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தை பொறுத்த்வரை, முழுமையாக நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றாலும்கூட, ஒரே அளவிலான - சீரான அளவில் நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்த இரு மாநிலங்கள் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக எதிர்பாராத அளவுக்கு கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும், தமிழக முதல்வரிடத்தில் இங்கு எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கான அழைப்பு கடிதம், பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளைய தினம் காணொலி காட்சி மூலம் பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்படும் முன் பிரதமர் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பொது முடக்க அறிவிப்புக்குப் பின்னர் நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிய பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது.

கொரோனா பொது முடக்கம் குறித்து மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாநில அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. பொது முடக்கத்தால் கொரோனா பரவலை தடுக்க முடியாது எனக்கூறப்படும் நிலையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடைகள், தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதில் பணியாற்றுபவர்கள் பணிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும், இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கூறிவருகின்றனர்.

இவை குறித்தும் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.