இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 300 இந்தியர்களின் போன்கள்
ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.

THE WIRE உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், 'இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும்" என்று, தகவல் வெளியானது. 

மிக முக்கியமாக, “The Wire, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி ஹிந்து, உள்ளிட்ட ஊடகங்களின் பத்திரிகையாளர்களது செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டிருக்கலாம்” என்றும் புகார் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு, கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தது. இது அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் புகார் சுமத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது.
 
மேலும், “நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 2 அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் 3 பேர், மூத்த பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் மூத்தத் தலைவர்கள் என ஒட்டுமொத்தமாக 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள்இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் ஒட்டுக்கேட்கப்பட்டதாக” புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது.

இந்த பிரச்சனையானது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பி உள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று கூடிய நாடாளுமன்த்தின் இரு அவைகளும் தொடங்கிய நில நிமிடங்களிலேயே முடங்கிப்போயின. 

குறிப்பாக, இந்தத் தகவல் திருட்டில் இஸ்ரேலிய நிறுவனமான பெகாசஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது என்றும், அந்த நிறுவனம் நமது நாட்டின் முக்கிய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தகவல்கள் உளவு பார்த்திருக்கின்றன என்கிற குரல் தற்போது பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 

இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தால் விவேகமானதாக இருக்கும் என்றும்,  இல்லையென்றால் வருங்காலங்களில் இது பாஜகவை காயப்படுத்தும்” என்றும், அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி கூறவேண்டும் என்றும், இல்லாவிட்டால், வாட்டர்கேட் ஊழல்போல் தலைவலியாக இருக்கும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே போல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும்; அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதித்துறை, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் 17 ஊடகங்களும் அடங்கும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார். 

“ பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி இந்த குற்றச்செயல்கள் நடந்திருப்பதாகவும், இந்தியர்களின் தொலைப்பேசிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உளவு பார்க்கப்பட்டு தரவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்” அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

“40 பத்திரிகையாளர்கள், 3 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு நீதிபதி என முக்கியப் பிரமுகர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டு, தரவுகள் திரட்டப்பட்டுள்ளன என்றும், பெகாசஸ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட அந்த அமைச்சகம் இதுவரை மறுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும், அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

“ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய செயல் நாட்டின் பாதுகாப்புக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஜனநாயகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், சர்வாதிகாரிகளாக மாறி, பல உத்திகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகளை, பத்திரிகைகளை,  நீதிபதிகளைக் கண்காணித்து அவர்களது தொலைப்பேசி, வாட்ஸ்ஆப் தரவுகளை உளவு பார்த்துப் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு இதனால் மிகப் பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது என்றும், இப்படி எல்லாம் நடக்குமா? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இது நடந்திருப்பது வேதனை அளிக்கிறது” என்றும், அவர் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “இதில் குற்றவாளிகள் யார்? இதன் பின்னணியில் இருப்பது யார்? என்பதைக் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வலியுறுத்தி உள்ளார்.