கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். இதற்கான காரணமாக, பேடிஎம் நிறுவனம் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, ப்ளே ஸ்டோரில் சூதாட்ட ஆப்களுக்கு இடமில்லை என்று கூகுள் திட்டவட்டமாக தெரிவித்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதே நேரம் ஐஓஎஸ் பயனாளிகள், ஆப்பிள் ப்ளே ஸ்டோர் மூலம் பேடிஎம் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏனெனில், தடையை வெளியிட்டிருப்பது கூகுள் தானே தவிர, ஆப்பிள் நிறுவனம் அல்ல.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில், பேடிஎம் செயலி, ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வதற்கு எளிதான வழியாக பார்க்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, தள்ளுவண்டி கடைக்காரர்கள் வரை பேடிஎம் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடியும். ஆனால் பேடிஎம் செயலை சமீபத்தில் `கிரிக்கெட் பேண்டஸி' என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுடன் ஆப் அறிமுகம் செய்தது. இப்படி விளையாடும்போது, பணமும் வெல்ல முடியும் என்ற வாய்ப்பை பேடிஎம் வழங்கியது. இதுபோன்ற சூதாட்டத்திற்கு பிளே ஸ்டோரில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது கூகுள்.

இதையடுத்துதான் ஆன்லைன் சூதாட்டம் என்ற பெயரில் பேடிஎம்மை, ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது. கூகுள் நிறுவனத்தின் இந்த நீக்கத்தை, பேடிஎம் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் விரைவில் பிளே ஸ்டோரில் தங்களது செயலி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. அதேநேரம் பேடிஎம் மணி, பேடிஎம் ஃபார் பிசினஸ், பேடிஎம் இன்சைடர் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் இதர ஆப்கள், ப்ளே ஸ்டோரில் தொடர்ந்து கிடைக்கும்.

பலமுறை பேடிஎம் நிறுவனத்திற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகுதான், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த பேன்டஸிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சீனாவை சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் தூதராக சச்சின் செயல்படுவதா என்ற வர்த்தக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில்தான் இப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த செயலி நீக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இது சீன நிறுவனத்தை சேர்ந்த செயலியாக இருந்தபோதிலும், இது மத்திய அரசால் தடை செய்யப்படவில்லை. ஆகவே ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்துள்ள பயனாளர்கள் அதை பயன்படுத்த முடியும் எனக்கூறப்படுகிறதாக. இதற்கு முன் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட சீன செயலிகள் பலவற்றை போல இந்த தடை இருக்காது என நம்பலாம். இனி வரும் காலத்தில், பேடிஎம் புதிதாக டவுன்லோடு செய்ய முடியாதே தவிர, ஏற்கனவே இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் தொடர்ந்து மேற்கொண்டு இதை நிச்சயம் பயன்படுத்த முடியும். பேடிஎம் வேலட்டிலுள்ள பணம் குறித்து பயப்பட தேவையில்லை என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் பேடிஎம் கூறுகையில், ``உங்கள் பணம் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. Paytm ஆப்பை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். நாங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்க மாட்டோம். ஆன்லைன் சூதாட்ட இணையதளம் பணப் பரிமாற்றத்திற்கு பேடிஎம்மை பயன்படுத்தினால் அதையும் அனுமதிக்க மாட்டோம்" என்று பேடிஎம் உறுதியளித்துள்ளது.