நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாத இறுதியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை இந்த கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டு, அதன்பின் தொடங்கியது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு கூட்டத்தொடர் தொடங்கிய போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டது அங்கிருந்தவர்களை அச்சத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து அக்டோபர் ஒன்றாம் தேதி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்கூட்டியே கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறையும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாநிலங்களவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அவைத்தலைவரான வெங்கய்யா நாயுடுவின் இந்த நடவடிக்கையை கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத மாநிலங்களவையில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரம் குறித்த விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் மக்களவை கூட்டத்தொடரையும் புறக்கணிப்பதாக அறிவித்தன.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்தது எதிர்பாராத நிகழ்வு என விமர்சித்தார். தொடர்ந்து மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-ஐ பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவையின் செயல்திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும் மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைய இருந்ததாகவும், ஆனால், கொரோனா பெருந்தொற்றால் 10 நாள்களில், 23-ம் தேதியே மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தொடரின் போது 22 மசோதாக்கள் (மக்களவையில் 16 மற்றும் மாநிலங்களவையில் 6) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின. இரு அவைகளும் 27 மசோதக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இது வரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.