டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6ஆவது மாடியில், இன்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அறிந்து 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்களின் தொடர் முயற்சியால், சில மணி நேர போராட்டத்திற்கு பின், அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான பணிகள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பலருக்கும் அச்சத்தை தந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டத்தில்தான் முக்கியமான கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், 'இன்று காலை 7:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை வருவதைக் கண்டவுடன் எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக ஐந்து தீயணைக்கும் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். மேலும் இரு தீயணைக்கும் வாகனங்களும் கொண்டுவரப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்' என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஏற்கெனவே முடிவாகியிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் விபத்தினால் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச் 23-ந்தேதி முடித்துக் கொள்ளப்பட்டது. அடுத்தபடியாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான காலம் நெருங்கி வருகிறது. தற்போதைய கொரோனா சூழ்நிலையில், கூட்டத்தொடரை நடத்துவது குறித்து நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் இரு அவைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இணையவழியில் கூட்டத்தொடரை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. வழக்கம்போல் நடத்துவதாக இருந்தால், சமூக இடைவெளியை பின்பற்றி, இருக்கைகளை எப்படி மாற்றி அமைப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டது. இடவசதி இல்லாவிட்டால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் எம்.பி.க்களை பங்கேற்க வைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

1952-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு புதிய மாற்றங்களுடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நடைபெறவிருப்பது இதுவே முதல் முறையாகும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் அடுத்த வாரத்திலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுபற்றி பேசிய மூத்த அதிகாரி ஒருவர், ``மாநிலங்களவை எம்.பி.க்கள் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்பதற்காக, மாநிலங்களவையில் 60 உறுப்பினா்களும், அந்த அவையின் மாடங்களில் 51 உறுப்பினா்களும், எஞ்சிய 132 போ் மக்களவையிலும் அமர வைக்கப்படுவாா்கள். இதேபோன்று, மக்களவைச் செயலகத்தின் சாா்பில், மக்களவை, மாநிலங்களவை, மாடங்களைப் பயன்படுத்தி, மக்களவை எம்.பி.க்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படும்.

பிரதமா், மக்களவைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா், இதர கட்சிகளின் தலைவா்கள், மத்திய அமைச்சா்கள், முன்னாள் பிரதமா்கள் மன்மோகன் சிங், தேவெ கௌட ஆகியோா் மாநிலங்களவையில் அமா்வாா்கள்

முதல் முறையாக மாடங்களில் அமரும் எம்.பி.க்கள், அவை அலுவல்களை சிரமமின்றி பாா்ப்பதற்கு வசதியாக பெரிய தொலைக்காட்சி திரைகளும் ஒலி பெருக்கிகளும் ஆங்காங்கே வைக்கப்படும். அனைத்து உறுப்பினா்களும் அவை அலுவல்களில் பங்கேற்கும் வகையில் அவா்களின் இருக்கைக்கு முன் ஒலிபெருக்கி பொருத்தப்படும்.

நாடாளுமன்ற அவைகளில் குளிா்சாதன வசதிகள் பயன்படுத்தப்படும் என்பதால், கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கிருமி தொற்றை அழிக்கும் புறஊதாக் கதிா்வீச்சு பயன்படுத்தப்படும். உறுப்பினா்கள், அலுவலா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இடையேயான நெருக்கத்தைத் தடுக்க பிளாஸ்டிக் திரைகள் பொருத்தப்படும்.

நாடாளுமன்ற அலுவல்களை நேரடியாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவன ஊழியா்கள், பத்திரிகையாளா்கள் குறைவான எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவா். அத்தியாவசியமின்றி காகிதப் பயன்பாடு இருக்காது" என்று கூறியிருக்கிறார்.