சட்டத்திற்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்தன.

இந்த தகவலைத் தான், சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பான International Consortium of Investigative Journalists - ICIJ என்ற அமைப்பு, வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிவைத்திருக்கும் இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்தப் பட்டியலில், “கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும்” கூறப்படுகிறது. 

அதாவது, நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களிலிருந்து கசிந்த 1.19 கோடி ஆவணங்களை, 117 நாடுகளைச் சேர்ந்த 150 ஊடக நிறுவனங்களின் 600 பத்திரிகையாளர்கள் சேர்ந்து பகுப்பாய்வு செய்து, இந்தப் பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

அதன் படி, அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பண்டோரா ஆவணங்களில், “பல்வேறு உலகத் தலைவர்களின் அறியப்படாத பண மோசடிகள், சட்டவிரோத பரிவர்த்தனைகள், வெளிநாடுகளில் பினாமி சொத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி” வெளிப்படுத்தியிருக்கிறது. 

முக்கியமாக, “இந்த அறிக்கையில் 91 நாடுகளைச் சேர்ந்த 330 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும், பிரபலங்களும்” இடம் பெற்று உள்ளனர்.

அதன்படி, வரி ஏய்ப்பைப் பிரதானமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்தப் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்” என்று, பல்வேறு நாடுகளைச் சேர்ந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அத்துடன், “இவர்கள் அனைவரும் மாளிகைகள், பிரத்யேக கடற்கரை முகப்பு சொத்து, படகுகள் போன்றவற்றில் முதலீடு செய்து இருப்பதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, “இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளை தங்கள் புகலிடமாகப் பயன்படுத்திக் கொண்டு சட்ட விரோதமாக முதலீடுகள் செய்து, வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும்” அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இதில், ஆச்சரியமான விசயம் என்னவென்றால், பாண்டோரா பேப்பர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் “இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது” அனைத்து தரப்பு மக்களிடமும் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

அதே போல், “பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான சில மாதங்களில், வெர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனந்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக் கொண்டதாகவும்” அந்த ஆவணங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், “சச்சின் டெண்டுல்கர் தவிர, அந்த பட்டியலில் தொழில் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட 300 இந்திய பிரபலங்களின் பெயர்கள் உள்ளதாகவும்” கூறப்படுகிறது. 

இதில் கவனிக்க தக்க விசயம் என்னவென்றால், தற்போது வெளியாகியுள்ள பண்டோரா ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பிரபலங்கள் அனைவரும் குற்றம் செய்தவர்கள் என்பது இன்னும் சரியாக நிரூபணமாகவில்லை. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ஆவணங்களைக் கொண்டு, எடுக்கப்படும் அடுத்தகட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கைகளைப் பொறுத்தே அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டனரா? என்பது தெரியவரும்” என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

இதனிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா ஆவணங்கள் வெளியாகி, உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பண்டோரா ஆவணங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.