இந்தியாவில் கொரோனா நோய் பரவல் தீவிரமாக பரவி நிலையில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. வட மாநிலங்களில் நிலை மோசமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உள்ளது. 


 நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையில் பலருக்கு அதிகமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகின்றது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பலருக்கு மூச்சுத் திணறல் மிக அதிகமாகவே உள்ளது. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில், ஷாஹனவாஸ் என்ற இளைஞர், கொரோனா காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு தனது காரை விற்று மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவி வருகிறார். 


மும்பையின் மலாட் நகரில் வசிக்கும் ஷாஹனாவாஸ் ஷேக். 'ஆக்சிஜன் மேன்' என்று தற்போது அந்தப் பகுதியில் பிரபலமாக அவர் அழைக்கப்பட்டு வருகிறார். தனது ரூ.22 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி காரை விற்றுஅந்த பணத்தில் ஷாஹனவாஸ் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி தனது இடத்தில் வைத்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் உதவி என்று கேட்டு அவரை தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் உடனே சிலிண்டரை வழங்கி அவர் உதவி வருகிறார். 


இதற்கென்று குழு ஒன்றை அமைத்து, ஒரு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டு, ஒரு கண்ட்ரோல் ரூமையும் அமைத்துள்ளார். சென்ற ஆண்டே இந்த சேவையை துவங்கி விட்டார். இதுவரை 4000-க்கும் அதிகமானோருக்கு அவரது குழு உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.