“ஜனநாயக படுகொலை..” பாஜகவை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி தலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணியாகச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 13 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று, திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இரு நாள்களுக்கு முன்னதாகவே மக்களவை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அதாவது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், விலைவாசி உயர்வு, 3 புதிய வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க் கட்சிகள் கைகோர்த்து இந்த முறை மிகவும் ஒற்றுமையாகச் செயல்பட்டன. இதனால், எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கிப்போயின.

அதே நேரத்தில், ஓபிசி சட்ட மசோதா நிறைவேற்றத்திற்கு மட்டும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பல்வேறு மசோதாக்கள் எந்தவித விவாதமும் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. 

இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். இதில், பல பிரச்சனைகள் குறித்தது விவாதிக்கப்பட்டன.

அத்துடன், “இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் செயல்பாடு 22 சதவீதம் மட்டுமே இருந்ததாக” தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “ஒரு மாத கூட்டத் தொடரில் 21 மணி நேரம் மட்டுமே மக்களவை செயல்பட்டு உள்ளதாகவும்” வேதனை தெரிவித்தார். 

இந்த நிலையில், “மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்” எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாகச் சென்றனர். 

எதிர்க் கட்சி எம்.பி.க்களின் இந்த பேரணிக்கு, ராகுல் காந்தி தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாததால், நாங்கள் இன்று உங்களுடன் பேச இங்கு, வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கவலைத் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க மத்திய அரசு மறுத்ததை மக்களிடம் தெரிவிக்கவே இந்த பேரணி” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

“மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, ஜனநாயக படுகொலை” என்றும், ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.