கொரோனா பெருந்தொற்றின் 3 ஆம் அலை வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று, விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா பீதியில் சிக்கித் தவித்த இந்தியா, அதன் கோரப்பிடியில் இருந்து சற்று விலகி இருக்கிறது. அதன் படி, கடந்த 558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 3 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 383 ஆக உயர்ந்து உள்ளது.

அத்துடன், தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு நேற்றைய தினம் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், முன்பை விட கொரோனா இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

என்றாலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் சற்று குறைந்து காணப்பட்டாலும், புதிதாக உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

அதன் படி, இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த புதிய வகை வைரசால் இந்திய மக்கள் மீண்டும் கொரோனா பீதிக்கு ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக, ஒமைக்ரானால் வரும் பிப்ரவரிக்குள் இந்தியாவில் 3 வது அலை ஏற்படும் என்று ஐஐடி விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்து உள்ளார்.

முக்கியமாக, “வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் ஒமைக்ரான் என்னும் கொரோனா தொற்றின் 3 வது அலை உச்சத்தை எட்டும் என்றும், கொரோனா கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் 3 வது அலை உச்சத்தை எட்டும் போது, அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானி மனிந்திர அகர்வால், கணித்து உள்ளார்.

அதன் படி, “வருகிற பிப்ரவரிக்குள் 3 வது அலை புதிய உச்சத்தை எட்டும் போது, நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம்” என்றும், அவர் எச்சரித்து உள்ளார். 

“ஆனால், இது 2 வது அலையை விட மிதமானதாகவே இருக்கும்” என்றும், அவர் கணித்து உள்ளார்.

மேலும், “தற்போதைய புதிய மாறுபாடு கொரோனா வைரஸ், அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது என்றும், ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால், கொரோனா பீதியில் இருந்து சற்று மீண்டிருந்த இந்திய மக்கள் தற்போது மீண்டும் பீதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனிடையே, “கொரோனா தொற்றை விடவும், வரும் காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம்” என்று, ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் கூறியுள்ளது உலக மக்களிடையே, பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.