இந்தியாவின் 7 மாநிலங்களில் கிட்டதட்ட 14 பெண்களை திருமணம் செய்து, மாறி மாறி தனது 14 மனைவிகளுடன் வாழ்ந்துவந்த கில்லாடி டாக்டரை காதலர் தினத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதாவது, ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பட்குரா பகுதியைச் சேர்ந்த 54 வயதான ரமேஷ் சந்திர ஸ்வெய்ன், ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பணி நிமிர்த்தமாக சென்று வந்த நிலையில், பல பெண்களையும் திருமணம் செய்து ஏமாற்றி ஏமாற்றி அவர்களுடன் அவ்வப்போது வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஹோமியோபதி டாக்டரான ரமேஷ் சந்திர ஸ்வெய்ன், கடந்த 1979 ஆம் ஆண்டு தான் அவருக்கு முதல் திருமணம் நடந்து உள்ளது.

அதன் பிறகு, கடந்த 1982 ஆம் ஆண்டு அவருக்கு ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் 2 வது திருமணம் நடந்து உள்ளது. 

இப்படியாக, ஒடிசாவை சேர்ந்த இந்த இரு மனைவிகள் மூலமாக ஹோமியோபதி டாக்டரான ரமேஷ் சந்திர ஸ்வெய்னுக்கு 5 குழந்தைகள் உள்ளன. 

அதன் பிறகு, அந்த டாக்டர் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிக்கொண்டு ரமேஷ் வேறு மாநிலங்களுக்கு சென்று உள்ளார். 
அப்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது 2022 ஆம் ஆண்டு வரை டாக்டர் ரமேஷ், அடுத்தடுத்து 12 பெண்களை வெவ்வேறு மாநிலங்களில் மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து உள்ளார். 

அப்படியாக, டாக்டர் ரமேஷ் மொத்தம் 14 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். 

அத்துடன், தனது 14 மனைவிகளுக்கும் ஒருவரை ஒருவர் சந்திக்காத வகையில் மாஸ்டர் பிளான் போட்ட அந்த டாக்டர் டெல்லி, மராட்டியம், மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா என்று இந்தியாவின் நாடு முழுவதும் கிட்டதட்ட 7 மாநிலங்களில் உள்ள பெண்களை அவர் இப்படி மோசடியாக திருமணம் செய்திருக்கிறார்.

மேலும், தான் டாக்டர் என்பதை பயன்படுத்திக்கொண்ட அவர், ஆன்லைன் திருமண தகவல் மையங்களில் பதிவு செய்துகொண்டு, பள்ளி ஆசிரியை, வழக்கறிஞர், டாக்டர், பாதுகாப்பு படையில் பணி புரியும் பெண் என்று, பல்வேறு பெண்களை டாக்டர் ரமேஷ் திருமணம் செய்து உள்ளார்.

அதன்படி, இந்த மோசடியான திருமணத்திற்காக, அந்த டாக்டர் போலியான அடையாள அட்டை, ஆவணங்கள், போலி ஆதார் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியே இப்படி பல பெண்களையும் தனது திருமண வலையில் விழ வைத்து மோசடியாகவே திருமணம் செ்யதிருக்கிறார். 

குறிப்பாக, ஏற்கனவே திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட அதாவது விவகாரத்து பெற்று அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களை குறிவைத்து டாக்டர் ரமேஷ், இப்படியான திருமண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 

அதுவும், தனது காதல் வலையில் விழும் பெண்களை திருமணம் செய்துகொள்ளும் அவர், அந்த பெண்களுடன் சில மாதங்கள் வாழ்ந்து விட்டு, அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பணத்தை எடுத்துக்கொண்டு வேறு மாநிலத்திற்கு செல்வதையும் ரமேஷ் வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

டாக்டர் ரமேஷின் இந்த மோசடி திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர்.

அதன் படி, டெல்லியை சேர்ந்த ஆசிரியை, ரமேஷை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், அந்த ஆசிரியை டாக்டர் ரமேஷ் ஒடிசா மாநிலம் புவனேஷ்வருக்கு அழைத்து சென்று உள்ளார். 

அங்கு, ரமேஷ் வேறு சில பெண்களை ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் போலி ஆவணங்களை காட்டி  ஏற்கனவே திருமணம் செய்தது அப்போது, அந்த ஆசிரியைக்கு தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், டாக்டர் ரமேஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனால், அவர் வேறு மாநிலத்திற்கு தப்பிச் சென்று தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் தான், அந்த மோசடி கல்யாண மன்னன் அதிரடியாக தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அதுவும் காதலர் தினமான நேற்றைய தினம் போலீசாரிடம் அவர் வசமாக சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, டாக்டர் ரமேஷூன் 14 மனைவிகளில் 9 மனைவிகளை தொடர்பு கொண்டு, போலீசார் அவரின் மோசடி குறித்து கூறி உள்ளனர். 

மேலும், மற்ற மனைவிகளையும் தொடர்புகொண்டு இந்த உண்மை நிலையை கூற போலீசார் முயன்று வருகின்றனர்.

குறிப்பாக, கைது செய்யப்பட்ட டாக்டர் ரமேஷ், தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.