“புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்” என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

சமீப காலமாக புதுச்சேரியில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சியினர் தொடர்ந்து மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு புதுச்சேரியில் தற்போதைய அரசியல் சூழல் மிக மோசமாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே, அவசர கதியில் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“புதுச்சேரியில் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படும் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவிர, 3 பேர் மத்திய அரசால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என கடந்த 1963 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதுச்சேரி ஒன்றிய பகுதி சட்டத்தினைப் பயன்படுத்திக் கொண்டு, 3 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்து, அவர்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும், அவர் விமர்சித்து உள்ளார். 

“இந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் ஆளுநர் கிரண் பேடி நேரிடையாக 3 நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பரிந்துரை செய்து அவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்ததும், அந்த நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டே மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ஜனநாயகப் படுகொலையை மீண்டும் அரங்கேற்றத் துடிக்கும் பாஜக அரசின் சதிச்செயல் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும், அவர் கூறியுள்ளார். 

“புதுச்சேரி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரங்கசாமி தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதுச்சேரி அரசாட்சிக்குத் தேவையான பதவியேற்பு நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படாது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு செய்யப்படாமல் இருக்கும் தற்காலச் சூழலில், அவசர அவசரமாக நியமன உறுப்பினர்களை நியமித்திருக்கும் மத்திய அரசின் செயலானது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்” என்றும், சீமான் விமர்சித்து உள்ளார். 

“அதுவும், துறை சார்ந்த வல்லுநர்களை நியமிக்காமல் பாஜகவை சேர்ந்தவர்களையே உறுப்பினர்களாக நியமித்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

“முதலமைச்சர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறபோதும், அவரை கலந்தாலோசிக்காது, அவரது உடல் நலமின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கி நியமன உறுப்பினர்கள் மூலம் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசைக் கட்டுப்படுத்துவதும், ஆட்சியின் நிலைத்தன்மையைக் குலைப்பதும், கவிழ்ப்பதுமென செயல்பட முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் ஜனநாயக துரோகம்” என்றும், சீமான் சுட்டிக்காட்டி உள்ளார். 

“கொரோனா நோய்த் தொற்று நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்திலும் கூட, கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக அரசின் அரசியல் நடவடிக்கை மிக கீழ்த்தரமானது” என்றும், சீமான் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார். 

“ஆகவே, ஜனநாயக மரபுகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து நியமன உறுப்பினர்களை நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசை, நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்றும், சீமான் கேட்டுக்கொண்டு உள்ளார்.