டி.ஆர்.பி. (Target Rating Point) என்பது குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி சேனல் பெரும் அளவீட்டு புள்ளிகள். அதாவது, மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டு அளவாகும். குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அல்லது தொடரினை பார்த்து ரசித்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே அந்த தொலைக்காட்சி சேனலின் மதிப்பீட்டுப் புள்ளிகளாக கணக்கிடப்படுகிறது. 

இந்த அளவீடு ஆனது பொதுவாக இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படும் :

* Frequency monitoring: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பிரத்தியேக கருவியினை பொருத்தி, தொடர்ச்சியாக கண்காணித்து அளவிடப்படுவது. நிகழ் நேரத்தில் குறிப்பிட்ட சேனலினை எத்தனை நபர்கள் பார்க்கின்றனர் என்பதினை அடிப்படையாக கொண்டு இந்த வகை அளவீடு மேற்கொள்ளப் படுகிறது.

* Picture matching technique: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளில் பிரத்தியேகமாக கருவிகை பொருத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில் புகைப்படங்கள் எடுத்து, இந்த புகைப்படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்த சேனலுக்கு அதிகமாக நேயர்கள் இருக்கின்றனர் என அளவிடப்படும்.

தொலைக்காட்சிகளில், இப்படியான டி.ஆர்.பி. ரேட்டிங் என்பதை BARC வழியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் எப்போதும் கணக்கிடுவது வழக்கம். இந்த ரேட்டிங்க்கை வைத்து, எத்தனை பேர் ஒரு நிகழ்ச்சியை, ஒரு தொலைக்காட்சியை பார்க்கின்றார்கள் என்பது கணக்கிடப்படும் என்பதால், அதிகம் பேர் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு, அதற்கேற்ப விளம்பத்தாரர்கள் எண்ணிக்கையும், லாபமும் அதிகரிக்கும்.

இந்த டிஆர்பி ரேட்டிங் மற்றும் மதிப்பீடு புள்ளிகளை அதிகம் பெறுவதற்காக, வட இந்திய செய்தி ஊடகங்களான ரிப்போப்ளிக் தொலைக்காட்சி உட்பட மூன்று சேனல்கள் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் டிஆர்பி ரேட்டிங் மதிப்பிடுவதற்கு "மக்கள் மீட்டர்" நிறுவிய ஒரு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.

செய்தி சேனல்களில் அதிக டிஆர்பி அல்லது தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை பெற்றதாக கூறப்படும் ரிப்போப்ளிக் டிவியின் அதிகாரிகள் இன்று அல்லது நாளை வரவழைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பை போலீஸ் கமிஷ்னர் பரம்பிர் சிங் செய்தியாளர்களை சந்திக்கையில், ஆங்கில செய்தி சேனலான ரிபப்ளிக் மற்றும் 2 மராத்தி சேனல்கள் இந்த டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக கூறினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான ரிபப்ளிக் டிவியின் அதிகாரிகளிடம் விசாரணை செய்யப்பட்டு, இதன் பின்னணி அறியப்படும் என காவல்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன.

”கல்வியறிவே இல்லாத பகுதிகளில் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் பார்க்க வாய்ப்பு இல்லை என்ற நிலையில், அங்கு குறிப்பிட்ட நேரத்தில் இந்த தொலைக்காட்சியை பார்க்க 500 வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரிபப்ளிக் சேனலின் இயக்குநர் அர்ணாப் கோஸ்வாமி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம், டி.ஆர்.பி ரேட்டிங்க்கை வைத்து விளம்பரதாரர்களிடமிருந்து அவர்கள் பெறும் நிதி மற்றும் அவை குற்றங்களின் வருமானத்திலிருந்து வந்தவையா என்பது விசாரிக்கப்படும் என்று மும்பை காவல்துறைத் தலைவர் பரம்வீர் சிங் கூறியிருக்கிறார். விசாரணை, சம்பந்தப்பட்ட சேனல்களின் வங்கிக் கணக்குகள் வழியாக கண்டறியப்படும் என சொல்லப்படுகிறது.

"சேனலில் சம்பந்தப்பட்ட எவரும், எவ்வளவு உயர் நிர்வாகமாக இருந்தாலும், எவ்வளவு மூத்தவராக இருந்தாலும், விசாரிக்கப்படுவார்கள், சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார். ஏதேனும் குற்றம் வெளிவந்தால், கணக்குகள் பறிமுதல் செய்யப்படும், மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரம்வீர் கூறியிருக்கிறார்.

முக்கியமாக விளம்பர வருவாய்க்கு மட்டுமே தவறான டி.ஆர்.பி மதிப்பீடுகள் வாங்கப்பட்டன என சொல்லப்படுகிறது. அதனால் தான், ஒரு குறிப்பிட்ட சேனலை எல்லா நேரத்திலும் சுவிட்ச் வைத்திருக்குமாறு வீடுகளுக்கு கூறப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சந்தேகித்திருக்கிறார்கள்.