கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில், தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு அடுத்த நிகழ் கல்வியாண்டுக்கான பாடப்பிரிவுகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பள்ளித் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெற்றோரும், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரடியாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தங்கள் மாநிலத்தை விட்டு குறைந்தவுடனே பள்ளிகளை திறக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பினால் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை முதலில் கூறுங்கள், அதை வைத்து நாங்கள் கருத்து சொல்கிறோம் என்கிறார்கள்.

தற்போது கொரோனா இல்லாமல் பள்ளிகள் திறந்திருந்தால் இந்நேரம் காலாண்டு தேர்வு நடந்து முடிந்திருக்கும். டிசம்பரில் அரையாண்டு தேர்வுக்கான பாடங்கள் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் நவம்பரில் திறக்கப்படும் என்ற கருத்தை தமிழக அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மத்திய மனித வள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறுகையில் வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். எனவே இவர் சொல்வதை பார்த்தால் அடுத்த ஆண்டு 2021-இல்தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிகிறது.

கல்லூரி இறுதித்தேர்வுகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே 2020ல் வெறும் 3 மாதங்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் செயல்பட்ட நிலையில் 9 மாதங்கள் மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஞாயிறு அன்று ஒரே நாளில் 54,859 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று ஒரு நாளில் 53,601 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்பு 22,15,074 லிருந்து 22,68,675 ஆக அதிகரித்துள்ளது.

குழந்தைகளை பொறுத்தவரையில், இந்தியாவில் கொரோனா உயரிழப்பு விகிதம் 2 சதவீதம் ஆக உள்ளது. ஒரு சதவீதத்திற்குள் கொண்டுவர அரசு முயற்சித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு விவகாரத்தில் உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தமே இப்போது 28.66% ஆக்டிவ் நோயாளிகள் தான் நாட்டில் இருக்கிறார்கள்.

குழந்தைகள், உலகளவில் மிக அதிகமாக பாதிக்கப்படுவதும், தெரியவருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சொல்லப்படும் அமெரிக்காவில், ஜுலை 15 முதல் 31 க்கு இடைப்பட்ட கடைசி இரண்டு வாரங்களில் மட்டும் ஏறத்தாழ 97,000 குழந்தைகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனாலேயே, குழந்தைகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தினர் கூறுகின்றனர். தற்போதைக்கு பள்ளிகளுக்கு விடுமுறையை நீட்டியுங்கள் என்ற அறிவுறையையும் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.