12 - 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து  15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார். அவர் கூறுகையில் “12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது. அதுசார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர்” என தெரிவித்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.