நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க சொல்லி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி அளித்த தீர்ப்பளித்தது. இதை எதிர்த்தும், மறு ஆய்வு செய்யக்கோரியும், நீட் தேர்வினை ஒத்திவைக்கக் கோரியும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன. 

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தை பொறுத்தவரையில், நீட் தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடலூரில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ``கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் முடியும் வரை நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" என்று பேட்டியளித்திருந்தார்.
 
பல லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துள்ளதால் தேர்வுகளை எழுத மாணவர்கள் விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றே மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படியான சூழலில்தான், 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அமைச்சர்கள், கொரோனா அச்சுறுத்தலால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுதக்கால் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிச்சாமி பேசிய போது, ``கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

பொதுவாக ஜேஇஇ அமர்வு ஆகஸ்ட் முதல் தொடங்குகிறது. ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக அவ்வாறு அமையவில்லை. செப்டம்பரில் பரீட்சை ஏற்பாடு செய்தபின், ஜேஇஇ மேம்பட்ட தேர்வு நடைபெறும். அதன் பிறகும், முடிவுகளின் முடிவும், ஆலோசனை செயல்முறைக்கு ஒன்றரை முதல் இரண்டு மாதங்களும் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு அமர்வு நவம்பருக்கு முன் தொடங்க முடியாது. அதாவது, ஏற்கனவே மூன்று மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், ``இந்த தேர்வுகளின் தேதிகள், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்கப்படுமானால், 2021 ஆம் ஆண்டின் முதல் செமஸ்டரை தொடங்க முடியாது. அதேபோல ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு ஆண்டுக்கு பல முறை எப்படியும் நடத்தப்படுகிறது. எனவே நேரம் வழங்க முடியாத மாணவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்வை எழுதலாம்" என்று கல்வியாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையின் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.