“இந்தியாவில் தினமும் 77 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், இந்த பாலியல் குற்றத்தில்  ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசு கவலையுடன் கூறியிருந்தது.

அத்துடன், நாடு முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார குற்றங்கள் தொடர்பான புள்ளி விபரங்களைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் அப்போது வெளியிட்டு இருந்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 77 பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பான வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகி இருப்பதாகவும்” தேசிய குற்ற ஆவண காப்பகம் தற்போது அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவண காப்பகமானது (NCRB) இந்தியத் தண்டனைச் சட்டம் ஐபிசியின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களைத் தொகுத்து வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையின் படி, “கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

“இதற்கு முந்தைய ஆண்டை விட கடந்த 2020 ஆம் ஆண்டில் இது 4,05,236 அளவுக்குக் குறைவாகப் பதிவாகி உள்ளது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

“கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மட்டுமே 27,046 என்றும், இதில் பாதிக்கப்பட்ட 25,498 பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், மற்றவர்கள் 2,655 பேர் சிறுமிகள் என்பதும்” தேசிய குற்ற ஆவண காப்பகமானது பதிவு செய்துள்ளது.

அதே போல், இந்தியா முழுவதும் நாளொன்றுக்குச் சராசரியாக 77 பாலியல் பலாத்கார வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி இருப்பதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, “இந்த பாலியல் பலாத்கார குற்றங்களை மாநில அளவில் பார்க்கும் போது, ராஜஸ்தான் மாநிலம் முதல் இடம் பிடிக்கிறது. இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிக பட்சமாக 5,310 பாலியல் பலாத்கார வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி இருப்பதாகவும்” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

“ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்ததாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 2,769 என்ற அளவிலும், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 2,339 என்ற அளவிலும், மராட்டிய மாநிலத்தில் 2,061 என்ற அளவிலும், அசாம் மாநிலத்தில் 1,657 என்ற அளவிலும், இந்த பாலியல் பலாத்கார குற்றங்கள் வழக்காகப் பதிவாகி இருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “இந்த பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தவிர, கணவர் மற்றும் உறவினர்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்ட வகையில் மொத்தம் 1,11,549 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும்” தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.