திருமணமான ஆண்களைக் குறி வைக்கும் பேயால், கிராமத்தில் உள்ள பல இளம் ஆண்களும் ஊரை விட்டுச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதால், கிராமமே கண் கலங்கி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பீதியான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் குண்டூரிபாடி கிராமத்தில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட இளம் வயதுடைய ஆண்கள், அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்து வருகின்றனர்.

இது தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக எந்த துப்பும் இது வரை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பீதியடைந்துள்ள குண்டூரிபாடி கிராமத்தினர், கடும் பீதியில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள்.

இதனையடுத்து, இந்த மர்மமான மரணம் தொடர்பாக கிராம மக்களும் தீவிர விசாரணையில், ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களாலும், சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பீதியின் உச்சத்திற்கே அவர்கள் சென்று உள்ளனர்.

இப்படியாக, கடந்த 4 ஆண்டுகளில், திருமணம் செய்துகொண்ட இளம் ஆண்கள் மட்டும் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 

இதற்கு காரணம், கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்று, ஆண்களைத் தேடித் தேடிக் கொல்வதாகப் பயப்படும் கிராமத்து மக்கள், இதற்குத் தீர்வு கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு மந்திரவாதியை சந்தித்தாக ஆலோசனை கேட்டதாகத் தெரிகிறது. 

ஆனால், அந்த மந்திரவாதியோ, “அனைவரும் ஊரை விட்டு காலி செய்யுங்கள்” என்று கூறி இருக்கிறார். இதனால், கிராமத்து மக்கள் இன்னும் பீதியில்  உரைந்து போய் இருக்கிறார்கள்.

இப்படியாக, பேய் பயம் காரணமாகவும், மந்திரவாதியின் எச்சரிக்கை காரணமாகவும் கிராமத்தை விட்டு பலரும் வெளியேறத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, பல வீடுகளும் தற்போது காலியாக உள்ளன. காலியான வீடுகளை யாரும் வாங்கவும் முன்வரவில்லை. பலரும், உயிர் பிழைத்தால் போதும் என்ற வகையில் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக, “பேய் ஊர் போல்” அந்த கிராமம் தற்போது காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, உள்ளூர் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த கிராம வாசிகள் தற்போது குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அதே நேரத்தில், தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கிராம மக்களிடம் இருக்கும் பேய் பயத்தை நீக்கும் முயற்சியில் தீவிரமாக தற்போது களத்தில் இறங்கி உள்ளனர். ஆனாலும், கிரம மக்களிடம் இந்த பேய் பயம் நீங்கியதாகத் தெரியவில்லை.

இதனிடையே, ஒரு பேய்க்கு பயந்து ஊரை காலி செய்யும் கிராம வாசிகளால், அந்த சுற்றுப்புறப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.