“எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை ராஜீவ் காந்தி” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உருக்கமாக கூறியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ராஜீவ் காந்தி சிலைக்கும் அவரது உருவப் படத்திற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதாவது, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, மனித வெடிகுண்டாக வந்தவர்கள், அவரை படுகொலை செய்தனர். 

அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்து இன்றைய தினம் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 

இதனால், இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்றும், எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை ராஜீவ் காந்தி” என்றும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டர் பதிவிட்டு உள்ளார். 

இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“அவர் ஒரு இரக்கம் உள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார் என்றும், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை அவர்” என்றும், உருக்கமாக அவர் கூறியுள்ளார். 

மேலும், “எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர் என் தந்தை என்றும், நான் அவரை இழக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்” என்றும், ராகுல் காந்தி சற்று உருக்கமாகவே பதிவிட்டு உள்ளார். 

இதனிடையே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை தமிழக காங்கிரஸ் காட்சி எதிர்க்கும் நிலையில், ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்திருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக பார்க்கப்படுகிறது.