விதிமுறைகளை மீறி தாய் காய்கறி விற்றதால், தாயார் என்றும் பார்க்காமல் நகராட்சி ஊழியர் ஒருவர் அவரிடமிருந்து காய்கறிகளை பறிமுதல் செய்த சம்பவத்தால், அவரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் அமகத் நகர் மாவட்டம் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ரஷீத் சேக் என்பவர், தனது தாயாருடன் வசித்து வருகிறார். 

இதனிடையே 36 வயதான ரஷீத் சேக், அங்குள்ள பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

தற்போது, அங்கு மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விதி முறைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட பறக்கும் படை பணியில், அந்த ஊழியர் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் நகராட்சியில் ஊழியரான ரஷீத் சேக், “பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பாடுகள் எதுவும் நடக்கிறதா” என்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 

அப்போது, அவரது வீட்டின் அருகே அந்த ஊழியரின் தாயார், தள்ளு வண்டியில் காய்கறிகளை வைத்து, அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். இதனைப்பார்த்த ரஷீத் சேக், கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்தமையால், தனது தாயார் என்றும் பார்க்காமல், அவர் வைத்து வியாபாரம் செய்து வந்த காய்கறிகளை அதிரடியாகப் பறிமுதல் செய்தார். 

அத்துடன், அந்த காய்கறிகளை நகராட்சி வண்டியில் அள்ளிப்போட்டார். இதனை, அங்கிருந்து அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, அந்த ஊழியரின் கடமை தவறாத நேர்மையை வெகுவாக பாராட்டி, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், அந்த வீடியோவானது, அந்த மாநிலம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக அங்குள்ள செய்திகள் நகராட்சி ஊழியரான ரஷீத் சேக்கிடம் கேள்வி கேட்டபோது, “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீதி, வீதியாக சென்று காய்கறி விற்க தடை இல்லை. ஆனால், வீதிகளில் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது கூடாரம் அமைத்தோ காய்கறி வியாபாரம் செய்ய அரசு அனுமதி மறுத்துள்ளது” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “இது தொடர்பாக எனது தாயிடம் முன்கூட்டியே நான் தெளிவாக கூறியிருந்தேன் என்றும், ஆனால் அவர் அரசின் விதிமுறைகளை மீறி தள்ளு வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு, கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வந்தார் என்றும், அதன் காரணமாக, நான் அவரின் காய்கறிகளை பறிமுதல் செய்து, நடவடிக்கையை எடுத்தேன்” என்றும், விளக்கம் அளித்தார்.

இதனிடையே, “பெற்ற தாயிடமே காய்கறியை பறிமுதல் செய்து கொரோனா தடுப்பு விதிமுறையை அமல்படுத்திய ரஷீத் சேக்கை” அங்குள்ள நகராட்சி கமிஷனர் தனஞ்செய் கோலேகர், வெகுவாக பாராட்டினார். இது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.