“எந்தப் பெண்ணும் ராகுல் காந்தியை திருமணம் செய்ய விரும்பவில்லை” என்று, பாஜக பெண் எம்.பி. பேசியுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவர். அவர், எது பேசினாலும் அது சர்ச்சையாக வெடித்துக் கிளம்பும். அந்த வகையில், தற்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பற்றி, கேலி செய்யும் நோக்கத்தில் அவர் கூறியுள்ள கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, “பொருளாதாரமும், விவசாயிகளும் வலுவாக இருந்திருந்தால் இந்தியா எல்லைக்குள் நுழையச் சீன ராணுவத்திற்கும் துணிச்சல் இருந்திருக்கா” என்று, 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருந்தார்.

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் பேசிய பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரை எந்தப் பெண்ணும் திருமணம் செய்ய விரும்பவில்லை” என்று, வெளிப்படையாகவே பேசினார்.

அத்துடன், “பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவரைப் பார்த்து, குழந்தைகள் கூட கேலி செய்வதாகவும்” அவர் கூறினார்.

மேலும், “அனைவரும் பிரதமராக விரும்புகின்றனர் என்றும், ஆனால் அதற்கான தகுதி வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“விவசாயிகள், ராணுவ வீரர்கள் என அவரவர்களுக்கென தனி பங்குகள் உள்ளன. ஆனால், சில துரோகிகள் ராணுவ வீரர்களே தேவை இல்லை எனக் கூறுகின்றனர்” என்றும், அவர் எதையோ குறிப்பிட்டுப் பேசினார். 

குறிப்பாக, “உணர்வு, அறிவு, கலாச்சாரமற்ற, மதவெறி உடைய நபர்கள் இம்மாதிரியான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்” என்றும், அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

“இது போன்ற நபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவீர்களா? என்று, ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டபோது, அவர்களோ அந்த நபரை கேலி செய்கின்றனர்” என்றும், இவர் கேலி செய்து பேசினார். 

“அப்படிப்பட்ட அந்த நபரும், அவரின் தாயாரும் இத்தாலியில் அமர்ந்துகொண்டு இங்கே பிரதமராக வேண்டும் என்று கனவு காண்கின்றனர்” என்றும், பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூரின் இந்த விமர்சன பேச்சு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, கடந்த 2008 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில், 82 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கைத் தேசிய புலனாய்வு முகமை தற்போது வரை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக பிரக்யா சிங் தாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது.