ஒரு அற்ப காரணத்திற்காக, தன்னுடைய ஆண் குழந்தையை தாயே வெறும் 45,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஹபீப் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷேக் சோயா கான், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

கணவனை பிரியும் போது, கருவுற்று இருந்த 22 வயதான ஷேக் சோயா கான், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். 

தற்போது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில், ஒரு பக்கம் வேலை இல்லாத காரணத்தால் வருமானம் இல்லாமலும், இன்னொரு பக்கம் குழந்தையை வளர்க்க முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

குறிப்பாக, 22 வயதான ஷேக் சோயா கானுக்கு, எப்படியாவது மும்மை சென்று விட வேண்டும் என்று, சிறு வயது முதுலே அவருக்கு அளவுக்கு அதிகமான ஆசையும், ஆர்வமும் இருந்து உள்ளது.

தனது மும்பை கனவை நிறைவேற்றவும், தான் இனி கஷ்டப்படாமல் வாழவும் முடிவு எடுத்த அந்த 22 வயதான ஷேக் சோயா கான் என்ற தாய், தன் குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

அதன்படி, தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகத் தான் பெற்ற குழந்தைக்கு அவரே விலை பேசியும் வந்தார். இறுதியாக, தன்னுடைய ஆண் குழந்தையை வெறும் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளார்.

இந்த தகவல் எப்படியோ, 22 வயதான ஷேக் சோயா கானின் கணவருக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவர் அப்துல், அங்குள்ள காவல் நிலையத்தில் மனைவியின் செயல்பாடு குறித்து புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தை விற்பனை செய்யப்பட்டது உண்மை என்று கண்டுபிடித்தனர். இதனையடுத்து, 22 வயதான தாய் ஷேக் சோயா கானை, போலீசார் கைது செய்தனர்.

மேலும், விற்பனை செய்யப்பட்ட குழந்தையை அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, குழந்தையின் தந்தையிடம் ஒப்படைத்தனர்.

அத்துடன், குழந்தையை வாங்கி குடும்பத்தினர், குழந்தையை விற்றுக்கொடுத்த தரகர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஒரு அற்ப காரணத்திற்காக, தன்னுடைய ஆண் குழந்தையை, தாயே வெறும் 45,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.