பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே, அனைவரும் நிச்சயம் இணைந்திருங்கள் என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் மெல்ல குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவிருப்பதாகக் கூறியிருப்பது பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய சுகாதார சவால்கள் தொடர்பாக கருத்தரங்கு ஒன்று நேற்று நடைபெற்றது. அதில் ஆலோசனை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள், புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``நடப்பாண்டுக்கான கிராண்ட் சேலஞ்சஸ் கூட்டம் இந்தியாவில் நேரடியாக நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலை காரணமாக காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதுதான் தொழில்நுட்பத்தின் சக்தி. உலகலாவிய பெருந்தோற்றான கொரோனாவால் கூட தொழில்நுட்பத்தை தடுக்க முடியவில்லை” என்றார்.

இந்தியாவில் வலிமையான அறிவியல் விஞ்ஞான சமூகம் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, சிறப்பான அறிவியல் நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள்தான் இந்தியாவின் சொத்து என்றும் புகழாரம் சூடினார்.

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களால் எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, குறுகிய காலத்திற்குள் இதனை கட்டமைக்க முடியாது என்றும், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சரியான நேரத்தில் முன் கூட்டியே முதலீடு செய்தால்தான் சரியான பலன்களை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளுக்கு பல புதுமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.

மேலும், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதார் மோடி, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பொது முடக்கத்தை இந்தியா அமல்படுத்தியதுதான் இதற்கு காரணம் என்று தெரிவித்ததுடன், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.