புதிய கல்விக்கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் ``21-ம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி" என்ற தலைப்பில் காணொலி மூலம் உரையாற்றினார். 

மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, குருகுல கல்வி முறை, NTA எனப்படும் நுழைத்தேர்விற்கான அமைப்பு, 3 வயது முதலே கல்வியை தொடங்குதல், சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
 
தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியாளர்கள் வைத்த சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. இருப்பினும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
 
எதிர்ப்புகள் பல இருந்தபோதிலும், புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
 
அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவை உத்தரவிட்டது.

ஒப்புதலுக்கு பிறகு, இம்மாத தொடக்கத்தில், பிரதமர் மோடி இதுபற்றி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாற்ற்னார். அப்போது, ``இந்தியாவில் 34 ஆண்டுகால பழமையான கல்வி முறையை மாற்றியமைக்கும் தேசிய கல்வி கொள்கை எந்த ஒரு பகுதியிலும் சார்பு குறித்த கவலைகளை எழுப்பவில்லை, என்பது "மனதைக் கவரும்" விஷயமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அடுத்த ஆண்டே புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்றும், இன்றும் நடைபெறும் இரண்டு நாட்கள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

இதில் பேசிய பிரதமர் மோடி,

``எந்த மொழியைக் கற்பிக்கவோ, படிக்கவோ தேசிய கல்விக் கொள்கை தடை செய்யவில்லை. அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, வேறு எந்த சர்வதேச மொழியாக இருந்தாலும் சரி, ஆனால், இந்திய மொழிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சான்றிதழாகவும், குடும்பங்களுக்கு பெருமைகாக்கும் சான்றிதழாகவும் உள்ளது. இதனை மாற்றவே புதிய தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பல காலமாகவே, நமது கல்வி முறை என்பது மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பல்வேறு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைத்து, விளையாட்டு, கண்டுபிடித்தல் மற்றும் செயலாக்க முறையில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நமது பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் சமமான, செயல்திறன் கொண்ட கல்வி நடைமுறைப்படுத்தப்படும்"
 

என்று பிரதமர் மோடி கூறினார்.