குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றில், காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, மேற்கொண்டு சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், தற்போது இந்தியா பயங்கரவாதத்தை புதிய கொள்கை மற்றும் புதிய முறையில் எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும் பேசியபோது, ``மும்பை பயங்கரவாதத் தாக்குதல் என்பது இந்தியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும், அதனை நாடு ஒருபோதும் மறக்காது. நாட்டின் தற்போதைய தேவையாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதாக உள்ளது. இது வெறும் விவாதத்துக்குரியதாக மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியத் தேவையாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மோடி வலியுறுத்தவதன் பின்னணியாக, ``ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டேயிருக்கிறது. இதனால் நாட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதமேவும், பிரதமர் மோடி தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தைப்  பல மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர். தமிழகத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்தனர்.

மோடி கூறும் இந்த `ஒரே நாடு - ஒரே தேர்தல்' என்ற முறை, இந்தியாவில் 1967ஆம் ஆண்டுவரையில் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் (கேரளா விதிவிலக்கு) இருந்துவந்தன. ஆம், அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றுவந்தன. ஆனால், 1967, 1968ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதாலும் 1970ல் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும் தேர்தல்கள் மாநிலங்களிலும் நாடாளுமன்றங்களிலும் மாறிமாறி நடைபெற ஆரம்பித்தன.

இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் முழு காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது. ஐந்தாவது மக்களவையின் காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு, எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது மக்களவைகள் முழு பதவிக் காலமும் நீடித்தன. ஆறு, ஏழு, ஒன்பது, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்றாவது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நோக்கம் முழுக்கவுமே குலைந்துபோனது.

தற்போது இந்தியாவில், ஒரு சில ஆண்டுகளைத் தவிர, பிற ஆண்டுகளில் எல்லாம் 5-7 மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கின்றன. 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.

அதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பருக்குள் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2015ல் தில்லி, பிகார் மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2016ல் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதைத் தவிர்த்து, உள்ளூராட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்களைக் கணக்கில் கொண்டால் ஒரே வருடத்தில் இந்தியாவில் பல முறை தேர்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

இப்போது இதை மீண்டும் கொண்டு வர முனைகிறார் பிரதமர் மோடி எண்ணுவதாக தெரிகிறது. இது நடைமுறைக்கு வருமா வராதா என பொறுத்திருந்து பார்ப்போம்!