இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி பற்றிய உண்மை நிலை இன்று உறுதியாகி உள்ளது என்றும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் ``பொருளாதாரம் பற்றி பேசுவோம்” என்ற தலைப்பில் 4 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது:

``நாட்டின் 90 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்குவதும், பொருளாதாரத்தின் முக்கியமானதும் ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் அடங்கிய அமைப்புச்சாராத் துறை. இந்த துறையை அழிக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது.

இந்த துறையில் இருக்கும் மக்களிடம் ஏராளமான பணம் இருப்பதால் அதைத் தொட முடியவில்லை. அதனால், இந்த துறையை அழித்து அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்க அரசு முயல்கிறது. இந்த துறையில் உள்ள அனைவரையும் அடிமைகளாக்க முயல்கிறது. அமைப்புச்சாராத் துறையை சிதைக்க விரும்பும் மத்திய அரசை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து எதிர்த்து போராட வேண்டும்.

பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி கொள்கை, லாக்டவுன் ஆகிய 3 நடவடிக்கைகள் மூலம் அமைப்புச்சசாரா துறையை அழிக்க முயற்சி எடுத்துவிட்டது. இது உங்கள் அனைவரையும் அடிமையாக்கும் முயற்சி.

கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அமைப்புச்சாராத் துறை மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கான 3 உதாரணங்கள்தான் பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, லாக்டவுன் நடவடிக்கையாகும்.

லாக்டவுன் நடவடிக்கை திட்டமிடப்படாமல் எடுக்கப்பட்டது என்று நினைக்காதீர்கள். கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஊரடங்கு நடவடிக்கை என்றும் நினைக்காதீர்கள். இந்த 3 முடிவுகளின் நோக்கமும், அமைப்புச்சாராதுறையை அழிக்க வேண்டும் என்பதுதான்.

அமைப்புச்சாராத் துறையின் மீதான தாக்குதலின் விளைவை விரைவில் நாம் காண்போம். இந்த தாக்குதலில் இந்தியாவில் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது.

ஏனென்றால், 90 சதவீத வேலைவாய்ப்புகளை அமைப்புச்சாராத் துறைதான் உருவாக்கி வருகிறது. அமைப்புச்சாராத் துறையை ஒருமுறை நீங்கள் அழித்துவிட்டால், இந்தியாவில் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட முடியாது.

நீங்கள் தான் இந்த நாட்டை ஆள்கிறீர்கள். நீங்கள்தான் எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறீர்கள்.
உங்களுக்கு எதிராக ஒரு சதி இருக்கிறது, நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள், உங்களை அடிமைகளாக மாற்றும் முயற்சி நடக்கிறது. இந்த தாக்குதலை நாம் புரிந்து கொண்டு இதற்கு எதிராக போராட முழு நாடும் ஒன்றுபட வேண்டும்.

கடந்த 2008-ம் ஆண்டு உலகளவில் பொருளதாார மந்தநிலை வந்தது. இந்த பொருளாதாரப் புயலில் அமெரிக்கா, ஜப்பான் , சீனா உள்ளிட்ட உலகின் பொருளாதார வல்லமை நாடுகளும் பாதிக்கப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள வங்கிகள் வீழ்ந்தன, கார்ப்பரேட் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன, ஐரோப்பாவில் பல வங்கிகள் திவாலாகின.

ஆனால், இந்தியாவில் இந்த பாதிப்பு எதிரொலிக்கவில்லை, நம்நாடும் பாதி்க்கப்படவில்லை. அப்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கட்டணி ஆட்சியில் இருந்தது.

அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் சென்று , “ உலகம் முழுவதும் பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்கும்போது இந்தியா மட்டும் ஏன் பாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன” என்று நான் கேட்டேன்

அதற்கு மன்மோகன் சிங் என்னிடம், “ இந்தியப் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள விரும்பினால், இந்தியாவில் இருவிதமான பொருளாதாரக் கட்டமைப்பு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது அமைப்புசார்ந்த பொருளாதாரக் கட்டமைப்பு, 2-வது அமைப்புச்சாரா பொருளாதாரக் கட்டமைப்பு.

மிகப்பெரிய நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அடங்கியது அமைப்புசார்ந்த துறை, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு,குறுந்தொழில்கள் அடங்கியது அமைப்புச்சாராத் துறை. இப்போதுவரை இந்தியப் பொருளாதாரம் இயங்குவது அமைப்புச்சாரா பொருளாதாரத்தால்தான், ஆதலால், எந்த பொருளாதாரப் பெரும்புயலும் இந்தியாவை ஒன்று செய்ய முடியாது” என பதில் அளித்தார்"

என்று கூறியிருக்கிறார்.