2018ல் ’மீ டு’ என்ற ஹேஷ்டேக்  மூலம் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் தொந்தரவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இதில் பலர் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை குறித்து சமூக வலைதளங்களில் எழுதி பதிவிட்டனர். இந்த மீ டூ புகாரில் , அரசியல்வாதிகள், கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலரின் பெயர்கள் வெளியில் வந்தது. 

பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர், முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே அக்பரின் கீழ் பணியாற்றியபோது , அவர் தனக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக பிரியா ரமணி  குற்றம் சாட்டினார். பிரியா ரமணியின் மீ டு புகார் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, அதன் விளைவாக எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக பிரியா ரமணி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். 

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில்,  இறுதி தீர்ப்பு இன்று வழக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் , ‘ பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதால், ஒரு பெண் தண்டிக்கப்படக் கூடாது. பெண்கள் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களையும்,  மனக்குறையையும் வெளிப்படையாக  எந்தவிதமான தளத்திலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பல காலமாக பெண்கள், பேச தயங்கியதை பொது வெளியில் பேசும் பொழுது, அதற்கு எதிராக அவர்கள் சந்திக்கும் மன அழுத்தங்கள், அவர்களுக்கு தடையாக அமைகிறது என இந்த நேரத்திலாவது இச்சமூகம் புரிந்துக்கொள்ள வேண்டும். பிரியா ரமணி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்’’ என நீதிபதி தெரிவித்தார்.