விவசாயிகள் போராட்டம் தொடர்பாக 7 வயது சிறுமி ஒருவர் மத்திய அரசுக்கு அறிவுரை சொல்வது போல் பேசியும், பாடியும் உள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல், டெல்லி எல்லைப் பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளில், இது வரை எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அடுத்தடுத்து தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 47 வது நாளாக நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, நாடு முடிவதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ, “வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றத்தால் தடுக்க முடியாது” என்று, அதிரடியாகக் கூறியிருக்கிறது. அதே நேரத்தில், “உத்தரவுகள் மூலமாக எதையும் சாதித்து விடலாம் என்று, மத்திய அரசு நினைக்கக் கூடாது” என, உச்சநீதிமன்றமும் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது பெண் குழந்தை, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதி, பாடிய பாடல் மற்றும் அவர் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பலரும் தங்களது பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், அந்த 7 வயது பெண் குழந்தையைப் பலரும், “மண்ணின் மகள்” என்றே புகழ்ந்து வருகின்றனர்.

அதாவது, மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது பெண் குழந்தை சானிகா படேல் என்ற குழந்தை, வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பாடல் ஒன்றை எழுதி, அவரே பாடியும் இருக்கிறார். அத்துடன், விவசயாகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு, அந்த பாடலை அவர் பாடவும் செய்திருக்கிறார்.

இந்தப் பாடலானது, விவசாயிகளின் உரிமைகளுக்காக நிற்கவும், அவர்களின் தைரியத்தை அதிகரிக்கவும் செய்வதாக சக விவசாயிகள் கூறி வருகின்றனர். 

மேலும், “ மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் திருத்தச் சட்டங்களும், அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படாத வரை, விவசாயிகளின் போராட்டம் தொடர வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “கவலைப்பட வேண்டாம் விவசாயிகளே.. போராடுவது கடினம் தான். இந்தக் கிளர்ச்சி என்பது, வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்” என்றும், அந்த சிறு பெண் குழந்தை, விவசாயிகளுக்கு ஊக்கும் அளிக்கும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் சக விவசாயியின் மகளாகத் தன்னை பிரதிபலித்து உள்ளார். 

அந்த பெண் குழந்தை பாடி உள்ள பாடல் மற்றும் பேசி உள்ளக கருத்துக்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, “விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நல்லெண்ணம் கிடையாது” என்று,  ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.