7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், விலக நினைத்த காதலியை, காதலன் குத்திக் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் 25 வயதான யோகிதா கௌதம் என்ற இளம் பெண், அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அவர் படித்துக்கொண்டு இருக்கம் போதே, கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த விவேக் திவாரி என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் காதலர்களாக அந்த ஊரைச் சுற்றி பல இடங்களுக்கு ஜோடியாக உலா வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக மகிழ்ச்சியாகச் சென்ற காதலர்களின் வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், காதலன் விவேக் திவாரியிடமிருந்து அந்த இளம் பெண் யோகிதா கௌதம் விலக நினைத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காதலன் விவேக் திவாரி, அந்த இளம் யோகிதா கௌதமை பின் தொடர்ந்து சென்று, சமாதானம் செய்ய முயன்று உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், விவேக் திவாரி எவ்வளவோ சமாதானம் செய்தும், அவர் சமாதானம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த 18 ஆம் தேதி சம்பவதன்று, மாலை 6.30 மணி அளவில், காதலி யோகிதா கௌதமை மீண்டும் சமாதானம் செய்ய வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த காதலன் விவேக் திவாரி, காதலி யோகிதா கௌதமை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். அதன் பிறகு, வெறி தீராமல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காதலியைக் குத்தி கொலை செய்து உள்ளான்.

இதனையடுத்து, தன் காதலியின் உடலை, அவர் படிக்கும் அந்த ஆக்ரா மருத்துவக் கல்லூரிக்கு அருகிலேயே போட்டு விட்டுச் சென்றுவிட்டார். இதனையடுத்து, மறுநாள் காலை அந்த மாணவியின் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த அந்த பகுதியினர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த மாணவியின் உடலைப் பார்த்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் சில இடங்களில் காயங்கள் இருந்து உள்ளது. இதனையடுத்து. அந்த பெண்ணை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்ததாக இளைஞர் விவேக் திவாரி பெயர் அடிப்பட்டது. இதனால், அவரைப் பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது தான், இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வந்தது.

மேலும், விவேக் திவாரி கூறுவது எல்லாம் உண்மையா என்பதை உறுதி செய்வதற்காக, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.