பெங்களூருவில் காதலனை கழற்றிவிட்ட காதலியால் கடுப்பான காதலன், தன் காதலியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு கிரி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான நர்மதா, அந்த பகுதியில் உள்ள துவாரகா நகரை சேர்ந்த அபிஷேக் கவுடா என்ற இளைஞருடன் அறிமுகமாகி, நட்பாக பழகி வந்துள்ளார்.

நாளடைவில், அவர்களது நட்பு காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, நர்மதா - அபிஷேக் கவுடா இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

காலப்போக்கில், இவர்களது காதல் புளித்துப் போய் விட்டது போல?! உயிருக்கு உயிரான காதலில் விரிசல் விழுந்து, விலகத் தொடங்கியது.

குறிப்பாக, அபிஷேக் கவுடாவின் செயல்பாடுகளில் பல மாற்றங்களைக் கண்ட நர்மதா, அவரை விட்டு விலகிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், காதலன் அபிஷேக் கவுடாவுடன் பேசி பழகுவதைச் சமீபகாலமாக நர்மதா தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, அபிஷேக் கவுடாவுடன் இருந்த காதலை நர்மதா முற்றிலும் கை விட்டதாகவும் தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த காதலன்  அபிஷேக் கவுடா, இது தொடர்பாகத் தனது காதலி நர்மதாவிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், நர்மதா இது குறித்துச் சரிவர விளக்கம் கூறாத நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், காதல் விவகாரம் தொடர்பாகப் பேசி இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக நர்மதாவை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அபிஷேக் கவுடா அழைத்து உள்ளார்.

அதன்படி, கடைசியாகப் பேசு முடித்துவிட்டு வருவதாகக் காதலன் வீட்டிற்கு நர்மதா சென்றுள்ளார். அங்கு, இருவரும் தனியாகப் பேசிக்கொண்டு இருக்கையில், “என்னை எப்போதும் போல் காதலிக்கும் படியும், எப்போதும் போலப் பேசும் படியும் அபிஷேக் கவுடா, நர்மதாவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு நர்மதா மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, காதலர்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கடும் கோபமடைந்த காதலன் அபிஷேக் கவுடா, வீட்டில் இருந்த  கத்தியை எடுத்து, நர்மதாவை சரமாரியாகக் குத்தி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த நர்மதா, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து கீழே விழுந்துள்ளார்.

இது தொடர்பாக கிரி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், நர்மதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், தலைமறைவாக உள்ள அபிஷேக் கவுடாவை போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, காதலனை கழற்றிவிட்ட காதலியால் கடுப்பான காதலன், காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம், பெங்களூருவில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.