மேற்கு வங்க முதலமைச்சராக 3 வது முறையாக பதவி ஏற்ற மம்தா பானர்ஜிக்கு, ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால், அவர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி இருந்தார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவை மிக எளிமையாக நடைபெறும் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டு இருந்தது.  

அதன் படி, கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது.

இதன் காரணமாக, பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த பதிவி ஏற்பு விழாவில், மேற்கு வங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டசார்ஜி, முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

காலை 10.45 மணிக்கு நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், மம்தா பானர்ஜி மட்டுமே பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகே, தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் அவர், கொல்கத்தா காவல் துறை அளிக்கும் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

அதே போல், மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கலந்துகொள்ளும் மற்ற அமைச்சர்கள் அனைவரும் பின்னர் பதவி ஏற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், முதல் ஆளாக மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி தற்போது பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் வரும் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே மிகவும் எளிமையான முறையில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது.