“உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்” என்று, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் நாராயன் ரானா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானா, “மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்” என்று, ஆவேசமாக பேசினார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாசிக் மற்றும் புனே காவல் நிலையங்களில் சிவசேனா அளித்த புகாரின் பேரில், அவர் மீது இன்று காலை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன், மராட்டிய மாநில பாஜகவின் முக்கிய தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்ன்வாவிஸ் இது பற்றி கருத்து கூறும்போது, “நாராயண் ரானே கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

“ஆனால், தனி நபராகவும் கட்சி ரீதியாகவும் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்றும், குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், மத்திய அமைச்சரின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா கட்சியினர், நாசிக்கில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள பாஜக அலுவலகத்திற்குள் சரமாரியாக கற்களை வீசி தாக்கி உள்ளனர். 

மேலும், மும்பை நகரில் இருக்கும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் இல்லத்தையும் சிவசேனா தொண்டர்கள் முற்றுகையிடுவதற்காக, ஊர்வலமாக சென்றனர். 

அந்த நேரத்தில். பாஜக தொண்டர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு விரைந்து வந்த போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், இரு கட்சித் தொண்டர்களும் அங்கு 4 புறமும் சிதறி ஓடினார்கள். அந்த இடமே அப்போது போர்களம் போல் காட்சி அளித்தது.

அத்துடன், உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்” என்று, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் நாராயன் ரானா, அங்குள்ள சிப்லன் நகரத்தில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற போலீசார், அவரிடம் முதலில் விசாரணை நடத்தினர். இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும் என்று தகவல்கள் பரவியது.

அதன்படியே, மத்திய அமைச்சர் நாராயன் ரானாவை, நாசிக் போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சர்ச்சைக்குள்ளான மத்திய அமைச்சர் நாராயண் ரானே, தனது அரசியல் வாழ்க்கையை, சிவசேனா கட்சியில் இருந்து தொடங்கியிருக்கிறார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு மராட்டிய சட்டமன்றத்திற்கு தேர்வான இவர், 2005 ஆம் ஆண்டு சிவசேனாவின் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநில அமைச்சரானார். 

அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு விலகி புதிய கட்சியை தொடங்கினார். பின்னர், மராட்டிய தேர்தலின் போது தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்த அவர், தற்போது மோடி அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.