மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கொரோனாவின் 2 வது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,56,16,130 ஆக உயர்ந்து இருக்கிறது. 

அத்துடன், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதன் மூலமாக, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 1,82,553 ஆக அதிகரித்து இருக்கிறது.

இப்படியாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. 

இப்படியாக மருத்துவமனைகளில் எல்லா வகையிலும் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதால், ஆக்சிஜன் வாயுவை அந்தந்த மருத்துவமனைகளையே சேமித்து வைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருக்கும் சாகீர் ஹூசேன் மருத்துவமனையில், ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டு வந்தது. 

அந்த டேக்கரில் இருந்து, சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று மருத்துவமனையின் டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது, எதிர்பாராத விதமாக திடீரென்று ஆக்சிஜன் வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.

இதனால், டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெரிய அளவில் கசிந்து வெளியேறியது. இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சி அளித்தது. 

இந்த நிலையில், ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, அங்கு சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தனர். பர், மூச்சு விடவும் பெரிய அளவில் சிரமப்பட்டனர். அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, விபத்து நடத்த சம்பவ இடத்தில் ஆக்சிஜன் கசிவைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே போல், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், “ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்வது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை” என்றும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். தற்போது, இணையத்தில் இந்த செய்தி வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக ஆக்சிஜனை வழங்க வேண்டும்” என்று, அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக்கொள்வதாகத் தனது டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.