மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூட நம்பிக்கையால், மனைவியின் தலையை வெட்டி கணவன் நரபலி கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சிங்ராலியாவைச் சேர்ந்த பிரிஜேஷ் ஜாதவ் என்பவர், தன் மனைவி மற்றும் தன்னுடைய 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த பிரிஜேஷ் ஜாதவ், அது தொடர்பாக பல செயல்களை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், வழக்கத்தை விடவும், மற்றவர்களை விடவும், மிகப் பெரிய அளவில் மூட நம்பிக்கைகளை பிரிஜேஷ் ஜாதவ் பின்பற்றி வந்ததாகவும் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களாகவே பிரிஜேஷ் ஜாதவ், தன் வீட்டில் விநோதமான பூஜை ஒன்றையும் நடத்தி வந்து உள்ளார்.

இந்நிலையில், பிரிஜேஷ் ஜாதவ், தான் வணங்கக்கூடிய குல்தேவதாவை மகிழ்விக்கும் விதமாக, தன் மனைவியை கொடூரமாக கொலை செய்து உள்ளார்.

கொடூரத்தின் உச்சமாக, கொலை செய்த தன் மனைவியின் தலையை மட்டும் வெட்டி பூஜை அறையில் காணிக்கையாகப் படைத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, மனைவியின் சடலத்தை வீட்டிலேயே பிரிஜேஷ் ஜாதவ், புதைத்து உள்ளார். 

பூஜையில் சாமிக்கு மனைவியின் தலையை மட்டும் பிரிஜேஷ் ஜாதவ் காணிக்கையாக கொடுத்ததை, அவருடைய 2 மகன்களும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்ததுடன், பயத்தில் அங்கேயே அழ ஆரம்பித்து உள்ளனர். இதனையடுத்து, தனது இரு மகன்களையும் அவர் அதட்டியதாக தெரிகிறது. இதனால், பயந்துபோன அந்த இரு மகன்களும், பயந்து போய் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

தனது தந்தையிடமிருந்து தப்பித்த இரு மகன்களும், வெகு தூரம் ஓடிச் சென்று, அந்த பகுதியில் உள்ள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர். அங்கு வீட்டில் பூஜையில் இருந்த பிரிஜேஷ் ஜாதவிடம் விசாரித்துள்ளனர். இதில், அவர் தன் மனைவியை வெட்டி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை மீட்டுள்ள போலீசார், பூஜையில் வைக்கப்பட்ட அந்த பெண்ணின் தலையையும் மீட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பிரிஜேஷ் ஜாதவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி அருண் பாண்டே, “ஆரம்பத்தில் இச்சம்பவம் மூட நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் தெரிந்ததாக” குறிப்பிட்டார்.

“அதே நேரத்தில், மனைவியை கொலை செய்த பிரிஜேஸ், தன் மனைவியின் நடத்தை குறித்தும் சர்சைக்குறிய வகையில் பேசுகிறார் என்றும், இது பற்றி அவர் முழுமையாக எதையும் கூற மறுக்கிறார் என்றும், இதனால், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்ட பிறகே உண்மையான நிலவரம் என்ன என்பது பற்றி தெரிய வரும்” என்றும், அந்த போலீஸ் அதிகாரி கூறினார். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.