சினிமா பாணியில், போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஜீப்பில் இருந்து காதல் ஜோடி குதித்து ஓடிய நிலையில், பொது மக்கள் விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்த பரபரப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூரில் முஜாயித்தீன் என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்த இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து உள்ளார். இப்படியாக, இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம், இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்ததாக அவர்கள் உணர்ந்து உள்ளனர். இதனால் தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து காதலர்கள் இருவரம், தங்களது வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

அதன் படி, திட்டமிட்ட காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி உள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாயமான இளம் பெண்ணின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் போன் நம்பரை போலீசார் டிராக் செய்து, அவர் இருக்கும் இடத்தை கண்டுப்படித்தனர். 

அதன்படி, சிவமொக்கா மாவட்டம் ரிப்பன்பேட்டை பகுதியில் சென்று போலீசார் விசாரித்த நிலையில், காதலர்கள் இருவரும் இருந்த இடத்தை கண்டறிந்து அவர்களை போலீசார் மீட்டனர். இதனையடுத்து, அவர்களை தங்களது வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, சிவமொக்கா புறநகர் பகுதியில் போலீசாருடன் காதலர்கள் இருவரம் ஜீப்பில் சென்ற போது, “தங்கள் காதலை பிரித்து விடுவார்கள்” என்று, சந்தேகப்பட்ட அந்த காதல் ஜோடி, அங்கிருந்து தப்பி செல்ல முடிவு செய்தனர். 

இதனால், உயிரைப் பற்றி துளியும் யோசிக்காத அந்த காதல் ஜோடி, ஓடும் ஜீப்பிலிருந்து கீழே குதித்து வேகமாக ஓடி உள்ளனர். 

இதனால் பதறிய போலீசார், அவர்களைத் துரத்திச் சென்றனர். தப்பி ஓடிய காதல் ஜோடியை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், தப்பி ஓடுபவர்கள் இருவரும் திருடர்கள் என்று நினைத்து, அவர்களைத் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, போலீசார் காதல் ஜோடியை பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, சினிமா பாணியில் வீட்டில் இருந்து தப்பிய காதல் ஜோடி போலீஸ் ஜீப்பிலிருந்து கீழே குதித்துத்  தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.