உயிரிழந்த ஒரு காதல் ஜோடிக்கு, பெற்றோர்களின் சம்மதப்படி சுடுகாட்டில் கல்யாணம் நடந்துள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி, பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள பலாத் என்னும் கிராமத்தைச் சேர்ந்த  22 வயது முகேஷ் சோனவானே என்ற இளைஞனும், 19 வயதா நேஹா தாக்கரே என்ற இளம் பெண்ணும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும், அந்த பகுதியின் பல இடங்களுக்கும் சென்று, தங்களது காதலை வளர்த்து வந்தனர். 

பின்னர், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன் படி, காதலர்கள் இருவரம் தங்களது விருப்பத்தை, பெற்றோரிடம் கூறி, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அதன் படி, காதலன் முகேஷ் தனது பெற்றோரிடம் இதைப் பற்றி கூறிய போது, அவரது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. 

அதற்கு காரணம், இருவருமே ஒரே சாதியை சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது தான் காரணமாக இருந்தது. 

அதாவது, குறிப்பிட்ட இவர்களது சாதியின் வழக்கப்படி, ஒரே சாதி ஒரே உட்பிரிவில் திருமணம் செய்வது கிடையாது என்பது தான் இவர்களது காதலுக்கு பெரும் பிரச்சனையாக வந்திருக்கிறது. 

இதே காரணத்தை, அந்த காதலி வீட்டிலும் கூறி, அவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால், காதலர்கள் இருவர் வீட்டிலும் திருமணத்திற்குச் சம்மதிக்காத நிலையில், காதலர்கள் இருவரும் பிரிந்து வாழவும் முடியாமல், காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி, காதலர்கள் இருவரும் பக்கத்து கிராமமான வேட் என்ற கிராமத்திற்கு வந்து அங்குள்ள ஒரு மரத்தில் காதலர்கள் இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டனர்.

ஆனால், காதலர்கள் இருவரும் தற்கொலை செய்வதற்கு முன்பாக, “குட் பை” என்று, தன்னுடைய வாட்ஸ்ஆப்பில் அவர்கள் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்கள். 

காதலர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அந்த கிராம மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் கூறியுள்ளனர். அதன் படி, விரைந்து வந்த போலீசாரும் இருவரின் சடலங்களை மீட்டு, விசாரித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் கூறியுள்ளனர்.

இருவீட்டார் பெற்றோரும் இருவரின் சடங்களையும் பார்த்து கதறி அழுத நிலையில், அவர்களது விருப்பப்படி அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர். 

இதனையடுத்து, இரு வீட்டாரும் பேசிய நிலையில், தற்கொலை செய்து கொண்ட தங்களது பிள்ளைகளின் ஆசையை சாவுக்கு பிறகாவது நிறைவேற்றி வைக்க முடிவு செய்தனர். 

அதன்படி, உயிரிழந்த காதல் ஜோடிக்கு, அந்த சுடுகாட்டில் வைத்தே திருமண சடங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர், இரு வீட்டு குடும்பங்கள், உறவினர்கள் முன்னிலையில், உயிரிழந்த அந்த காதல் ஜோடியின் சடலங்களுக்குத் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. 

உயிரற்ற இரு சடலங்களுக்கும் திருமணம் மற்றும் இறுதி சடங்குகள் எல்லாம் செய்த பிறகு, 2 பேரையும் ஒரே குழியில் வைத்து அவர்கள் புதைத்தனர். 

இதனிடையே, உயிரிழந்த காதல் ஜோடிக்கு சுடுகாட்டில் வைத்து நடத்தப்பட்ட இந்த திருமணம் பற்றிய செய்திகள் வெளியே பரவிய நிலையில், இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.